கறுப்பு வெள்ளையில் அமைந்தன கட்டங்கள்
மறுமுனை எதிரியைத் தந்திரத்தால் தாக்கிட
செறுக்குடன் அணிவகுத்த எண்ணிரண்டு காய்களும்
வீறுநடையுடன் நகருமே சதுரங்கத்தின் இருபுறமும்!
நறுமுகை அரிசியுடன் அரசரைக் காத்திட
இறுமாப்புடன் மதிநுட்பம் ஒருங்கிணைத்து
முறையாய் முனைப்புடன் படைத்திரள்வரே
குதிரை யானையுடன் மந்திரியும் காவலாளும்!
மரப்பலகையில் ஆடினர் சதுரங்கம் அன்று
தொடுதிரையிலும் கணினியுடன் ஆடுவர் இன்று;
அமைதி குடைப் பிடிக்கும் இறுக்கத்தில்
சதியைத் திறனுடன் மதியும் வெல்லும் !
நகர்வுகள் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் திறனால்
சிதறாத கவனத்துடன் எதிராளியைச் சிதறடிப்பதே
அரசவை விளையாட்டாய் தமிழ் மண்ணில்
வேரூன்றிய சதுரங்கத்தின் மாண்பு !
முனைவர் தனலட்சுமி பரமசிவம்
திருப்பதிசாரம்
கன்னியாகுமரி மாவட்டம்
இந்தியா