கவிதை – www.worldpoetess.com
  Loading...

  கறுப்பு வெள்ளையில் அமைந்தன கட்டங்கள்

  மறுமுனை எதிரியைத் தந்திரத்தால் தாக்கிட

  செறுக்குடன் அணிவகுத்த எண்ணிரண்டு காய்களும் 

  வீறுநடையுடன் நகருமே சதுரங்கத்தின் இருபுறமும்! 

  நறுமுகை அரிசியுடன் அரசரைக் காத்திட

  இறுமாப்புடன் மதிநுட்பம் ஒருங்கிணைத்து

  முறையாய் முனைப்புடன் படைத்திரள்வரே

  குதிரை யானையுடன் மந்திரியும் காவலாளும்!

  மரப்பலகையில் ஆடினர் சதுரங்கம் அன்று

  தொடுதிரையிலும் கணினியுடன் ஆடுவர் இன்று;

  அமைதி குடைப் பிடிக்கும் இறுக்கத்தில் 

  சதியைத் திறனுடன் மதியும் வெல்லும் !

  நகர்வுகள் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் திறனால்

  சிதறாத கவனத்துடன் எதிராளியைச் சிதறடிப்பதே

  அரசவை விளையாட்டாய் தமிழ் மண்ணில்

  வேரூன்றிய சதுரங்கத்தின் மாண்பு !

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  திருப்பதிசாரம்

  கன்னியாகுமரி மாவட்டம்

  இந்தியா 

  நடமாடும் தெய்வம் – அம்மா

   

  காரிருள் கசங்கியப் பையுள்

  ஒரு துளி உதிரத்தில் உருவாக்கி

  குருதி கிடங்கில் வளர்த்து

  உயிரோட்டமான உலகை எனக்கு

  உயிராய் அறிமுகம் செய்தவள்

   

  உருக்கொண்ட நாள் முதல் 

  உதைத்தே வளர்ந்தேன் நானும்

  வலியிலும் என் வரவை மகிழ

  வலிமையுடன் உயிருக்குப் போராடியவள்

   

  சுள்ளி விறகால் செய்த சமையலும்

  கால்வயிற்றை மட்டும் நிறைத்திட

  பட்டினியில் தான் உழன்றாலும்

  பசியறியாது என்னை வளர்த்தவள்

   

  மேல்சட்டைக் கிழிசலை மறைத்து

  மானம் காத்திட விரைந்த முந்தியை

  கார்முகில் பிரசவித்த முதல்துளிக்கே

  என்சிரம் மேல் குடையாய் விரித்தவள்

   

  என்னுள் ஆழ உழுது தீரத்தை வித்திட்டு

  அன்பை உரமிட்டு பண்பாய் வளர்த்தவள்

  என் நடைக்கு ஊன்றுகோலான விரலை

  என்வாழ்வை முன்னேற்ற ஏணியாக்கியவள்

   

  குருதியை உணவாக்கி நெகிழ்ந்ததே நின் மாரும்

  குவலயத்தில் உன்தன் மடியே ஈடில்லா சொர்க்கம் 

  தன்னிகரில்லா அன்னையே நடமாடும் தெய்வம்

   

   

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  கன்னியாகுமரி மாவட்டம்

  இந்தியா.

   

  வேடிக்கை மனிதரைப் போல் சாய்ந்திடாது

  சாதிக்கப் பிறந்த தீரமிக்கப் பெண்ணே !

  பரந்த இப்புவியில் நல்லறங்கள் விதைத்திட

  சிரம் மேல் சுமையுடன் களமிறங்கிடு!

  வயிற்றுப்பசிப் போக்கும் விவசாயம் முதல்

  விரல்நுனியில் பம்பரமாய் சுழலும் பெண்ணே!

  அறிவுப்பசித் தீர்க்கும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும்

  பொறுப்பேற்கும் வல்லுனராக உன்னை முன்னிறுத்திடு !

  அடிமைத்தனத்தின் தோல்பாவையாய் அடங்கிவிடாதே 

  துடித்தெழும் வேங்கையாக வலுவேற்றிடு பெண்ணே !

  நரைக்கூடியப் பின் முடங்கி மூலையில்  கிடக்க 

  திரைமறைவில் வாழ்வதல்ல வாழ்க்கை அறிந்திடு!

  அச்சம் தவிர்த்து நிமிர்ந்த நன்னடையுடன் 

  தெளிவான பேச்சில் உலகை அதிரச்செய்வாய்!

  பால்கணக்கும் மோர்க்கணக்கும் பார்த்தது போதும்

  பாலியல் தொல்லைகளைத் தோலுரித்துத் தொங்கவிடு !

  கருச்சுமக்கும் இயந்திரமோ போகப்பொருளோ அல்ல நீ

  சொடுக்கியின் வலையில் மீனாய் விழுந்திட !

  உன்னுள் ஓருயிரைச் சுமக்கும் ஆற்றலுடன்

  உன்திறன் ஆராய்ந்து செயல்படத் தொடங்கிடு !

  முண்டாசுக்கவி கண்ட புதுமைப்பெண்ணாக

  மண்ணில் வீறுகொண்டு எழுந்துவா பெண்ணே!

  வேட்டையாடப்படும்  மானினம் அல்ல பெண்

  சாட்டையடிக் கொண்டு சமூகத்திற்கு அறிவித்துவிடு !

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  திருப்பதிசாரம்

  கன்னியாகுமரி மாவட்டம், இந்தியா.

  போகி
  ———

  இன்று இருந்திருந்தால்
  வயது நூறுக்கு மேலிருக்கும்
  பக்கத்து வீட்டு மாமி
  கொடுத்த தேன்குழல் நாழி;

  வடாம் கொத்தி
  காகம் விரட்ட மட்டுமே
  வைத்திருக்கும்
  கோவக்கார தாத்தாவின்
  கைத்தடி;

  நடுங்கும் கைகள்
  நேர்த்தியான கோர்வைகள்
  மூச்சுள்ள வரை
  பாட்டி பின்னிய கம்பளிச்
  சால்வைகள் ஒன்றிரண்டு;

  இதிலிருப்பவர் பலர்
  இன்றில்லை என
  கல்லூரிக்கால நினைவில்
  நெகிழும் அப்பாவின்
  செல்லரித்த குழுப்படம்;

  பேதையாய் தான்
  வளர்த்த கலை மறந்து
  குடும்பக் கலையில்
  தனை இழந்த அம்மாவின்
  கவிதைக் குறிப்பேடுகள்;

  இதழ்கள்
  உதிர்ந்த காம்பாய்
  யாரோ நினைவாய்
  மயிலிறகு,
  பெற்று மறைத்த,
  கொடுக்க மறந்த
  வாழ்த்தட்டைகள்;

  ஏலம் போன
  பூர்விக வீட்டின்
  சாளரக் கட்டைகள்,
  நியாபகக் கத்தைகளாய்
  சில நூறு மடல்கள்,
  கனத்த நாட்குறிப்பு புத்தகங்கள்;

  ஆயிரம் கதைகளோடு
  அண்டாவும் குண்டாவும்,
  நடை வண்டி முதல்
  முக்காலி வரை
  எத்தனையோ இத்யாதிகள்;

  அனைத்தும்
  பழையன கழிதலாய்
  ஒழிக்க ஒண்ணாமல்
  தூசு நீக்கி மீண்டும்
  பரணில் ஏத்துகையில்

  மறையும் நினைவுகளை
  மனதில் புதிதாய்
  புகுத்தும் பண்டிகை
  போகி!

  ~ நளினி சுந்தரராஜன்.
  Wisconsin, USA.

  ‌                 மரணம்

  முற்றுப் புள்ளிக்கு வாழ்க்கைப் பயணத்தில்

  சற்றும் எதிர்பாராத மலர்த்தூவல் வரவேற்பு

  தன்னைம்பிக்கையுடன் போராடுவோரையும் 

  தன்னுள் சிறைக் கொண்டு மகிழும் 

  திரும்பிப் பார்க்கச் செய்யும் துயரமும்

  திருப்பத்துடன் வலியின் உணர்வை உணர்த்தும் 

  குருதயத்தில் ஓடும் சிவப்புக் குருதியோ

  கருப்பாடையில் நிலைக்குலையும்

  ஏனைய உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நிரந்தரமாய் 

  ஓய்வெடுக்கத் தயாராகி முன்நிற்கும் 

  விழிகள் மட்டும் ஏனோ உயிரோட்டத்துடன்

  இன்னொரு உயிரில் ஒளியூட்டத் துடிக்கும்

  ஏக்கத்துடன் விழிகள் இமையுள் மறைய

  ஆதிக்க மேடையில் புன்னகைக்கும்

  கேள்விக் குறியாய் நின்ற மனதிற்கு

  தீப்பிளம்பின் உச்சத்தில் விடையளிக்கும்

  அரும்பிய கனவுகள் நனவாகும் முன்

  விருப்பம் கேட்காமல் அழைக்கும் 

  புரட்டிப் பார்க்க இயலாப் பக்கத்துடன்

  மரணம்…வலியுடன் ஓர் இனிய பயணம் !

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  திருப்பதிசாரம்

  கன்னியாகுமரி மாவட்டம்
  ஒற்றையாய்

  தனித்து இருக்கையில்

  அள்ளிக் கட்ட முடியா

  கற்றைகள்

  நாற்புறமும் சிதற,

  தாழக் குனிந்து

  ஒவ்வொன்றாய் சேகரித்து

  நுனி மடங்கியதை

  படிய நீவி,

  மீண்டும் சகடமேற்றி,

  எப்பாரமும் தாங்கும்

  மன அச்சு

  என்றும் முறியாதென்ற

  நம்பிக்கைத் தருமோர்

  ஆசுவாசம்,

  மயிற்பீலி நினைவுகளால்

  மட்டுமே சாத்தியம்!

  ~நளினி சுந்தரராஜன்.

                    இதழியல் 

  எழுத்தின் கருவில் அமைந்த பெயருடன்

  இதழ்கள் பலவும் வகைவகையாய் வெளிவரும்;

  தினசரி தொடங்கி ஆண்டு மலர்களாக

  மனமகிழ்வுடன் இதழ்கள் உலா வரும் !

  மக்களும், ஆளும் அரசும் லாவகமாய் 

  தகவல்கள் பகிரும் தளமாய் இதழ்கள்;

  விறுவிறுப்பான தலையங்கம் தோரணம் கட்ட

  நறுக்கென்று நுழையுமே ஒருபக்க சிறுகதையும்!

  சிந்தனைத் தூண்டும் கார்டூன் ஓவியங்களும்

  காந்தப் பார்வையுடன் அரசியல் தகவல்களும்

  வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும்

  துணுக்கு மூட்டைகளும் கருத்துணர்த்தி மிளிரும்!

  எல்லாத் துறைகளின் அன்றாட நிகழ்வுகள்

  பாமரமக்களையும் சென்றடையுமே பதிவுகளாய்

  தகவல்கள் பகிரும் காகிதப் பெட்டகம்

  பகலவனாய் இதழியலும் அவனியில் ஒளிரும்!

  பல்வேறு கூறுகளுடன் தமிழ் இதழியலும்

  வரலாற்றுச் சிறப்புடன் குவலயத்தில் வலம்வர

  தலைக்குனிந்த எழுதுகோலின் படைப்பால்

  தொலைநோக்குப் பார்வையுடன் கலையானதே இதழும் !

  நனிசிறந்த எழுத்துநடையை மேலாடையாய் உடுத்து

  தகவல்களை இடையில் ஒய்யாரமாய் சொருகியபடி

  முகத்திலிட்ட ஒப்பனையுடன் பக்கங்களை வரிசையாய் 

  கையகப்படுத்துவாளே இதழென்னும் பொல்லாச் சிறுக்கி !

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  திருப்பதிசாரம்.

  கன்னியாகுமரி மாவட்டம்.

  ஊற்றாய் நீ…

  மழைச் சாரல் துளியாய்

  கோர்த்த மென்நூல்

  ஓடையென நீ…

  தன் தடம் தான் தேடி

  தளிர் நிலம் தான் தவழ்ந்து

  சிற்றாறாய் நீ…

  கற்பாறை கரைந்தெடுத்து

  காடெங்கும் குதித்தோடி

  மலையருவியாய் நீ…

  சிகரமேறி ஆர்ப்பரிக்கும்

  வைரக்கீற்றாய் நிலம் வீழ்ந்து

  காட்டாறாய் நீ…

  சீற்றங்கொண்டு அணை

  தாண்டி பள்ளம் நிறைத்து

  மஹாநதியாய் நீ…

  உயிரனைத்தும் தன் கரத்தால்

  காத்துச் செல்லும்

  வாழ்வின் ஆதாரமாய் நீ…

  தன்னிகரில்லா திறங்கொண்டு

  பாய்ந்து செல்லும்

  ஜீவ நதியாய் நீ…

  என்றென்றும் சீர்மிகு

  சிறப்புடன் வாழியவே!

  ~நளினி சுந்தரராஜன்.

  திரும்புதலுக்கான

  தேதியிடப்படாத

  பயணச் சீட்டு

  வேண்டாமலே

  அளிக்கப்பட்ட ஒன்று.

  இன்றோ

  நாளையோ

  அடுத்த நொடியோ;

  திரும்புதலென்பது

  மெய்யின்றி

  துணையின்றி

  துரும்புமின்றி

  வந்த வழியில்

  கூட அல்லாது

  மாற்றுப் பாதையில்

  சடுதியில் செலுத்திடும்

  மர்மப் பயணம்.

  இருந்தும் கழுதைச்

  சுமையாய்

  ஆயிரம் பொதிகள்;

  உறவாலும்,

  பொருளாலும்,

  உணர்வுகளாலும்;

  உயிர்மெய் நோக

  என்பு தேய

  கட்டி இழுத்து

  எதற்கித்தனை

  அசெளகர்யங்கள்?

  அவ்வப்போது

  ஆங்காங்கே

  சுமைகளை பத்திரமாக

  இறக்கிச் சென்றால்

  இறகுப் பயணம்

  சுகமாகுமே!

  சாத்தியமாகுமா?

                                    ~நளினி சுந்தரராஜன்.

  மழலை மாறா ஏழாம் அகவையில்

  தமிழ்ப்பாடும் பாரதி கரம்பற்றி

  பதிந்த முத்தத்தில் நாணம் பீறிட

  ஒளிந்து கொண்ட பேதைமகள்

  கஞ்சிக் குடிக்க வழியில்லை வீட்டில்

  மிஞ்சியதோ கரைத்த ஷெல்லியும் பைரனும்

  தஞ்சம் கொண்ட வறுமையை

  நெஞ்சில் துணிவோடு சந்தித்தாள்

  பாரதிக் கவிதைகளின் தையல்நாயகி

  பார்வியக்கும் புதுமைப்பெண்ணாய் ஞானச்செருக்குடன் 

  தாயின் பரிவுடன் அன்பைப் பகிர்ந்திட

  தாரத்தின் கனிவினை இல்லறத்தில் ஊட்டினாள்

  கவிதை வானில் வட்டமிட்டப் பறவையின்

  அபிமான ரசிகையான மாண்புடையாள்

  பாரதியின் கவிதைப் புதையல்களைத் தளராது

  பாருக்குத் தேடி தந்த நன்னடையாள்

  இன்னல்கள் கண்டு பதறாத மனதிடம்

  பன்முகத்திலும் சிதறாத எண்ணங்கள்

  தடுமாற்றம் காணா தீர்மானங்களுக்கு 

  மௌனமே உத்தியாக கையாண்டாள் 

  பிறர் வியந்த வாழ்க்கைப் பயணத்தில்

  பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்த

  நிறம் மாறா கடையத்து மலரே நாம்

  மறந்த பாரதியின் செல்லம்மாள்!

  1 2 3 6

  Pin It on Pinterest