கவிதை – Page 5 – www.worldpoetess.com
    Loading...

    துள்ளிக்கின்ற கெண்டை

    மீன்கள்  அலையோடுப் போட்டி

    போட

    புத்திக்கெட்ட மீன்கள்

    மண்ணில்

    கொஞ்சம் விழ

    துடிதுடித்து போனபின்னே

    மின்னல் போல வந்து பாய

    அனுபவங்கள்

    மெல்லமெல்ல பாடம் புகட்ட

    உறங்குகின்றன

    உள்ளொளிகள்

    வெளிச்சம்போட்டு நடக்க

    மேகங்கள் திரைப்போட்டு

    நடை போடுவதைப் போல

    நம்குள்ளே முடங்கிக்கிடக்கும்

    ஞானொளி அனுபவத்தின்

    வாயிலில் நிற்க

    விழித்து எழுவதற்குமுன்

    அடுத்த இடைஞ்சல்கள் வந்து

    கதவைத் தட்ட

    மெல்ல மெல்ல

    கால்எடுத்து

    வைத்த போதும்

    சறுக்கிக் கொண்டு போக

    மற்றொரு அனுபவங்கள்

    கைப்பிடித்துத் தூக்க

    அனுபவ அலை ஓய்ந்தபின்பே

    ஞானொளிப்பிறக்க

    வாழ்க்கை தன் கவிதைக்கு

    முடிவுரை எழுதி முடிக்க

     

    செ.புனிதஜோதி

    உன்னிதயத்திற்கு உயிர்கொடுத்து
    உலகத்தில் உலவவிட்டதுண்டா
    உதிரத்தில் விளைந்ததை
    மண்காக்க உதிரச் சொன்னதுண்டா
    பன்னிருதிங்கள் உடல்நொந்து
    இன்னொரு உயிர் தந்ததுண்டா
    பெருவலி மறந்து
    மீண்டுமொரு மகவை பெற்றதுண்டா

    உதிரத்தை அமுதம் ஆக்கி
    உற்றவரின் பசியை நீக்கி
    கூட்டு பறவைக்கும்
    வீட்டு அணிலுக்கும்
    கரையும் காகத்திற்கும்
    கதறும் பசுவிற்கும்
    அன்பாய் உணவளித்து
    தக்கோரை அரவணைத்து
    பிரதிபலன் கருதா மாதவமே
    தியாகத்தின் மௌன உருவமமே
    அன்பின் எல்லையானாய்  
    அனைத்தும் இயக்கும் சக்தியானாய்

    சம்பந்தருக்கு ஞானப்பால்
    அம்பிகை அருளது
    ராமனோ மிதிலைக்கு அப்பால்
    கைகேயி வரமது
    கண்டிப்பான யசோதா தன்பால்
    வசுதேவர் அளித்தது
    உடுமண்டலத்தை வாயில் கண்டாள்
    கண்ணன் விளையாட்டது
    காந்தாரியின் மக்கள் பாசம்
    குந்தியின் மாறா உள்ளம்
    சபரியின் ராம நேசம்
    கண்டதால் உய்வுற்றது தேசம்

    மகனை சுமந்து
    மாற்றானை எதிர்ப்பாள்
    ராணி ஜான்சியாக
    சேவையில் திளைத்து
    வரலாற்றை திருத்துவாள்
    அன்னை தெரசாவாக
    நெஞ்சுரம் கொண்டு
    நாட்டை வழிநடத்துவாள்
    இந்திரா காந்தியாக
    மனிதம் மலர
    கவிதை புனைவாள்
    கவிக்குயில் சரோஜினியாக
    தாங்கும் தாயானாள்
    தாக்கும் இடியானாள்
    மேரி கோமாக
    பக்த மீராவானாள்
    பாட்டின் குரலானாள்
    சுப்பு லட்சுமியாக

    அடுக்களையில் உழன்று
    அலுவலும் பயின்று
    சிறு குழந்தை பேணும்
    சிறகில்லாத தேனீ
    அக்கருணையின் கரம்பற்றி
    இன்ப வானில் துயரமின்றி
    பறப்போம் கானம் பாடி
    மறவோம் நம் அன்னை மடி

    ஆதி சங்கரர் பட்டினத்தார்
    ஆண்டி முதல் அரசாண்டோர்
    உதறாத சொந்தம் ஒன்றுண்டு
    உயிரை கருவாக்கிய பூஞ்செண்டு
    நாட்டை தாய்நாடு என்போம்
    மொழியை தாய்மொழி என்போம்
    நதிகளிடமும் தாய்மை கண்டோம்
    தாங்கும் புவியிடமும் அன்னைக் கண்டோம்

    வலித்தாலும் அம்மா என்போம்
    வென்றாலும் அம்மா என்போம்
    பசித்தாலும் அம்மா என்போம்
    நிலை தாழ்ந்தாலும் அம்மா என்போம்
    உலகத்தின் அத்தனை செல்வம்
    அவள் தியாகத்தின் முன் அற்பம்
    உணராத வாழ்வும் துன்பம்
    அவள் காலடி நிழலே இன்பம்  

    இத்தனை தாயும் சொன்னேன்
    எந்தாய் மறந்தா போவேன்
    என்னுலகினை மாற்றிய அன்னை
    உன்போல் எவர்க்குண்டு ஆண்மை
    அதிகாலை கண்விழிப்பாய்
    பகல் முழுதும் உழைப்பாய்
    அறுசுவை உண்டி தருவாய்
    ஆசிரியராய் போதிப்பாய்
    உடல்நலிந்தால் மருந்தாவாய்
    கடிந்து திருத்துவாய்
    என் கண்ணீரில் மனமுடைவாய்
    ஆண்டு பலவாய் பணிசெய்தாய்
    அன்புளியால் செதுக்கி நிறைசெய்தாய்
    தன்னலம் பேணா பெருந்தவமாய்
    பாங்காய் என்னை வளர்த்திட்டாய்

    உன்னைப் போல வாழ்ந்திட்டால்  
    வையம் போற்றும் சீராட்டும்
    அரியணையில் ஏற்றி பாராட்டும்
    உன் பிள்ளை நல்லவனாவானா
    பேரை புகழை அடைவானா
    மங்காத கீர்த்தி கொள்வானா
    கருப்பா சிவப்பா மாநிறமா
    தெளியும் முன்னே கொண்டாடினாய்
    அபயம் தந்தே ஆளாக்கினாய்
    உன்போல் அன்பை கருணையினை
    தொல்லுலகில் ஒருவரும் தந்ததில்லை
    கோவிலுக்கு உன்னை  கூட்டிச்சென்று
    சிலைகளுக்கு சொல்வேன்
    இதோ கடவுள் என்று
    இனியொரு பிறவி வேண்டாமே
    நீயே அன்னையென்றால் சம்மதமே

    மின்தடை ஏற்பட்டால்

    வெளிச்சம் போய்விடும்-ஆனால்

    தடையின்றி இலவசமாய் கிடைக்கும்

    சூரிய ஒளி!

    வாடகை இல்லாது

    குடியிருக்கும் வீடு

    கருவறை

     

    பெருமதிமிக்க ஆயுதம்

    குற்றம் கலையும் சிறை

    தாய்ப்பார்வை

     

    வலிகளின் மாத்திரை

    சுகம் தரும் மருந்து

    தாயணைப்பு

     

     

    நாள் தோறும் ஆசான்

    நாள் அறிவுச் சாலை 

    அம்மா

     

    நிம்மதியான உறக்கம்

    உயர்ந்த பஞ்சணை

    தாய்மடி

    கற்றவை பற்றவை
    காண்பவை தெளிந்துவை
    பெற்றவை பயனுற
    பேதமை விலக்கிவை

    உற்றவை உயரவை
    உணர்பவை சிறக்கவை
    அற்றவை அகலவை
    ஆணவம் அழிக்கவை

    சிற்றவை சிறக்கவை
    சிந்தனை விழிக்கவை
    வற்றவை வறுமையை
    வாழ்வினைச் செழிக்கவை

    முற்றவை போற்றிடும்
    மொழியினை உயிரில்வை
    கொற்றவை துணையுடன்
    கொடுமைகள் கழைந்துவை

    வெற்றவை ஆகிடா
    விழுமியம் கற்றுவை
    தொற்றவை( இனப் ) பற்றினை
    தோல்வியைத் தூரவை

    மற்றவை தூற்றினும்
    மானிடம் பேசவை
    விற்றவை விளங்கிட
    விமர்சனப் பொருளைவை

    சுற்றவை சுழலவை
    சுவையுற எழுத்தைவை
    பற்றவை படரவை
    பாரெங்கும் தமிழைவை
    முற்றவை முதிரவை
    மொழியறிவினைக் கனியவை..!!

    தோழியே தமிழே கேளு,   

       தோட்டமே செய்தாய் பாரு! 
    வாழிய தமிழே கேளு,
       வானமாய் விரிதல் பாரு! 
    ஆழியே போலும் ஆசை 
       ஆட்கொளத் திறந்த பூவே! 
    வாழிய எனவே உன்னால் 
       வாசனைப் பொழிதல் பாரு!

    வல்லினச் சிறகுகள் இணையத்தளம்

    பறவை காற்றில் கவியெழுதுவதாக

    பாவையர் இணையத்தளத்தில் எழுதிடவே

    பாங்குடன் வடிவமைத்த ஜெர்பர்ட்வில்சன்

    மெல்லினங்களின் வல்லினச்சிறகுகளுக்கு பதாகை தந்தார்.

    அறிவில்ஒளியாய் அகன் அய்யா

    ஆற்றல் நிறை தோழமைகள்

    ஆதவனைத் தொடவே விழைந்திடுவர்.

    விண்தொடும் விழைவுடையோரை

    மண்ணுலகம் போற்றும் எந்நாளும்..

    சாதிக்க பிறந்தோம்

    சோதனையின் காலொடித்தே

    சாதனை செய்வோம் …

    வாழ்த்துகள் மலர்கள் தூவுகின்றேன்

    வாழ்க வாழ்க என்றே..

    நன்றியும் அன்பும்

    மு.கீதா

    புதுக்கோட்டை

    Pin It on Pinterest