nsn – www.worldpoetess.com
  Loading...

  போகி
  ———

  இன்று இருந்திருந்தால்
  வயது நூறுக்கு மேலிருக்கும்
  பக்கத்து வீட்டு மாமி
  கொடுத்த தேன்குழல் நாழி;

  வடாம் கொத்தி
  காகம் விரட்ட மட்டுமே
  வைத்திருக்கும்
  கோவக்கார தாத்தாவின்
  கைத்தடி;

  நடுங்கும் கைகள்
  நேர்த்தியான கோர்வைகள்
  மூச்சுள்ள வரை
  பாட்டி பின்னிய கம்பளிச்
  சால்வைகள் ஒன்றிரண்டு;

  இதிலிருப்பவர் பலர்
  இன்றில்லை என
  கல்லூரிக்கால நினைவில்
  நெகிழும் அப்பாவின்
  செல்லரித்த குழுப்படம்;

  பேதையாய் தான்
  வளர்த்த கலை மறந்து
  குடும்பக் கலையில்
  தனை இழந்த அம்மாவின்
  கவிதைக் குறிப்பேடுகள்;

  இதழ்கள்
  உதிர்ந்த காம்பாய்
  யாரோ நினைவாய்
  மயிலிறகு,
  பெற்று மறைத்த,
  கொடுக்க மறந்த
  வாழ்த்தட்டைகள்;

  ஏலம் போன
  பூர்விக வீட்டின்
  சாளரக் கட்டைகள்,
  நியாபகக் கத்தைகளாய்
  சில நூறு மடல்கள்,
  கனத்த நாட்குறிப்பு புத்தகங்கள்;

  ஆயிரம் கதைகளோடு
  அண்டாவும் குண்டாவும்,
  நடை வண்டி முதல்
  முக்காலி வரை
  எத்தனையோ இத்யாதிகள்;

  அனைத்தும்
  பழையன கழிதலாய்
  ஒழிக்க ஒண்ணாமல்
  தூசு நீக்கி மீண்டும்
  பரணில் ஏத்துகையில்

  மறையும் நினைவுகளை
  மனதில் புதிதாய்
  புகுத்தும் பண்டிகை
  போகி!

  ~ நளினி சுந்தரராஜன்.
  Wisconsin, USA.

  ஒற்றையாய்

  தனித்து இருக்கையில்

  அள்ளிக் கட்ட முடியா

  கற்றைகள்

  நாற்புறமும் சிதற,

  தாழக் குனிந்து

  ஒவ்வொன்றாய் சேகரித்து

  நுனி மடங்கியதை

  படிய நீவி,

  மீண்டும் சகடமேற்றி,

  எப்பாரமும் தாங்கும்

  மன அச்சு

  என்றும் முறியாதென்ற

  நம்பிக்கைத் தருமோர்

  ஆசுவாசம்,

  மயிற்பீலி நினைவுகளால்

  மட்டுமே சாத்தியம்!

  ~நளினி சுந்தரராஜன்.

  ஊற்றாய் நீ…

  மழைச் சாரல் துளியாய்

  கோர்த்த மென்நூல்

  ஓடையென நீ…

  தன் தடம் தான் தேடி

  தளிர் நிலம் தான் தவழ்ந்து

  சிற்றாறாய் நீ…

  கற்பாறை கரைந்தெடுத்து

  காடெங்கும் குதித்தோடி

  மலையருவியாய் நீ…

  சிகரமேறி ஆர்ப்பரிக்கும்

  வைரக்கீற்றாய் நிலம் வீழ்ந்து

  காட்டாறாய் நீ…

  சீற்றங்கொண்டு அணை

  தாண்டி பள்ளம் நிறைத்து

  மஹாநதியாய் நீ…

  உயிரனைத்தும் தன் கரத்தால்

  காத்துச் செல்லும்

  வாழ்வின் ஆதாரமாய் நீ…

  தன்னிகரில்லா திறங்கொண்டு

  பாய்ந்து செல்லும்

  ஜீவ நதியாய் நீ…

  என்றென்றும் சீர்மிகு

  சிறப்புடன் வாழியவே!

  ~நளினி சுந்தரராஜன்.

  திரும்புதலுக்கான

  தேதியிடப்படாத

  பயணச் சீட்டு

  வேண்டாமலே

  அளிக்கப்பட்ட ஒன்று.

  இன்றோ

  நாளையோ

  அடுத்த நொடியோ;

  திரும்புதலென்பது

  மெய்யின்றி

  துணையின்றி

  துரும்புமின்றி

  வந்த வழியில்

  கூட அல்லாது

  மாற்றுப் பாதையில்

  சடுதியில் செலுத்திடும்

  மர்மப் பயணம்.

  இருந்தும் கழுதைச்

  சுமையாய்

  ஆயிரம் பொதிகள்;

  உறவாலும்,

  பொருளாலும்,

  உணர்வுகளாலும்;

  உயிர்மெய் நோக

  என்பு தேய

  கட்டி இழுத்து

  எதற்கித்தனை

  அசெளகர்யங்கள்?

  அவ்வப்போது

  ஆங்காங்கே

  சுமைகளை பத்திரமாக

  இறக்கிச் சென்றால்

  இறகுப் பயணம்

  சுகமாகுமே!

  சாத்தியமாகுமா?

                                    ~நளினி சுந்தரராஜன்.

  பெருவிரலிடையே

  குறுகுறுப்பதென்ன

  வெண் மணலா?

  வளை நண்டா?

  என் நடை ஜதி

  கேட்டு வழி விடுவது

  பெரு நதியா?

  ஆழ்கடலா?

  இருமருங்கே

  கனி மரங்களில்

  மாதுளமா?

  மாம்பழமா?

  கடல் நடுவே

  கனிக் காடு

  அச்சமூட்டும்

  அழகுதான்.

  ஒரு பழம் பறித்து

  சிறு கடி

  என்ன ஒரு

  காடிச் சுவை

  சீ…சீ…

  தூக்கியெறிந்த

  பழத்தைப் பிடித்த

  திமிங்கலம் ஒன்று

  திருப்பி ஏறிந்தது

  பூப்பந்தாய்.

  தூரத்தில்

  என்னுயிர் தோழி…

  ஹே வாடி” என்று

  பந்தாட அழைக்கிறேன்.

  நேரமில்லை”

  நாளை பார்க்கலாம்”

  கையசைத்து

  வாகனமேறுகிறாள்.

  ஆழ்கடலில்

  ஏது பேருந்து?

  புரியாது குழம்பி

  நிற்கிறேன்.

  இல்லை மூழ்க

  ஆரம்பிக்கிறேன்

  பாதம் தொடங்கி

  கழுத்து வரை

  கொஞ்சம் கொஞ்சமாய்…

  வழி விட்ட

  நுரை திரள்

  குவிந்து மூடி

  பேரிரைச்சலாய்…

  தெரியாத நீச்சலை

  இன்று பழகியே

  ஆக வேண்டிய

  போராட்டம்.

  கரங்கள் துடுப்பாய்

  வேகம்…மேலும் வேகம்…

  உயிருக்கு விடுதலை

  இன்று கொடுப்பதாயில்லை.

  கரை எத்திசையிலும்

  தெரிவதாயில்லை

  அதென்ன ஒளிப்பிழம்பு

  எரிமலைக் குழம்போ?

  இல்லை

  எனை விழுங்க

  நெருப்புப்பந்தொன்று

  விஸ்வரூபமாய்…

  தொடுவானம்

  சாண் தூரம்தான்

  தொட நீந்துகிறேன்

  சட்டென்று ஒரு கீற்று…

  பளீர்!

  விழி துளைத்து

  என்பினுள் ஊடுருவி

  ஆயிரம் குத்தூசியாய்…

  ஜல்…ஜல்…ஜல்…

  செவி கிழிக்கும்

  பேரொலி

  காலிரண்டும் எதனோடோ பின்னி…

  ஐயோ! என் பார்வை

  இழந்தேனோ…?

  இத்தோடு நான்

  முடிந்தேனோ…?

  அலறி எழுந்தால்

  ஆழியும் இல்லை

  தோழியும் இல்லை

  சீலை இடாத

  ஜன்னல் வழி

  சுள்ளென்று

  சூரியன்…

  போர்வையில் சிக்கிய

  கொலுசு…

  மல்லாந்த நீச்சலில்

  நான்…!

  #கதைக்குள்_கவிதை

  உறவில் அவ்வியம் விஷம்

  நட்பில் துரோகம் விஷம்

  நிறத்தில் பேதம் விஷம்

  அகத்தில் அழுக்காறு விஷம்

  ஆதிக்கத்தில் ஆணவம் விஷம்

  நாத்திகமாய் இழித்தல் விஷம்

  ஊனம் நகைத்தல் விஷம்

  கொடுமைக் கண் மெளனம் விஷம்

  எளியோர் மேல் வலிமை விஷம்

  மற்றவர் திறன் களவு விஷம்

  நமக்குள் ஆண்டாண்டாய்

  ஊறிய ஆலகாலம் பல

  வேரோடு அகழ்ந்து களையாவிடில்

  விரைவாய் தன் சிதை

  தான் மூட்டும் அறிவிலிகளாகுவோம்!

  ~நளினி சுந்தரராஜன்.

  பேய் மழையே இனியும் வாராதே போ போ

  வானம் பார்த்து வாழ்ந்த கரிசல் காட்டவர்

  ஓலமாய் வைகின்றனர்.

  காலங்காலமாய் கட்டாந்தரையாய்

  கிடந்த காட்டாறு கரை புரண்டோடி

  தட்டி ஓலைக் குடிசையோடு

  சட்டிப் பானைகளும் கறவைகளும்

  தளிரும் சறுகுமாய் உயிர்களும்

  அடித்துச் செல்லப்பட்டால்

  சபிக்கத்தானே செய்வர்.

  மிஞ்சிய ஐம்பதறுவது பேரை

  சற்று வலிமையுடையோர் கரை தேற்றி

  சொற்ப சாமன்களுடன்

  ஓட்டுப் பள்ளியில் அடை சேர்த்தனர்

  ஈரக் காரைச் சுவர் அங்கே எல்லோருக்கும்

  கொஞ்சம் கதகதப்பாய்.

  பெரியவனும் நடுவனும் சின்னவனும்

  எப்பொழுதும் ஒன்றாய்த் திரியும்

  அண்டை வீட்டு கால் சட்டைச் சிறுவர்கள்

  அன்று நிரம்பி வழியும் கண்மாய்

  தாம் பிறந்ததிலிருந்து காணாத

  அதிசயமெனக் காணக் கிளம்பினர்.

  புது வெள்ளத்தில் கொத்துக் கொத்தாய்

  மீன் கூட்ட வண்ணங்கள் கண்ட

  சிறுவன்களுக்கு கொண்டாட்டம்

  வெள்ளமும் ஓலமும் அழுகையும்

  சட்டென மறந்து விளையாட

  மகிழ்ந்தோடும் பூஞ்சிட்டு வயது.

  சேற்றுச் சரிவில் கண்மாய் சுவரில் வழுக்கி

  ஒரு வழியாய் சிறு பாரை மேல்

  கால்கள் நீரில் அளைந்தவாரு உட்கார்ந்தனர்

  கண்ணெட்டும் தூரம் வரை

  கரை முட்டும் செஞ்சிவப்பு வெள்ளம்.

  பெரியவன்,

  கண்டெடுத்த கண்ணாடிப் பையொன்றில்

  துள்ளும் மீன் பிடிக்கக் குனிந்து நீர் அள்ளியபடி;

  நடுவன்,

  கட்டை விரல் நகக் கண்ணிடுக்கை கொரிக்கும் மீன்களின் சேட்டையில் களித்தபடி;

  சின்னவன்,

  நீரில் வாலும் மரக்கிளையொன்றில்

  காலுமாய் தொங்கித் தவிக்கும் ஓணானைக்

  காப்பாற்ற சிந்தித்தபடி.

  மாட்டிச்சே” உற்சாகமாய் பெரியவன்

  கத்தியதில் மற்ற இருவரும் தம் செயல்

  மறந்து அவனைப் பார்த்தனர்

  பைக்குள் கருவாழை நீளத்தில்

  இரு மீன்கள் துள்ளிக் கிழித்து

  வெளி வரத் துடித்து…

   “வாங்கடா போலாம்” பெரியவன் அழைக்க

  மீன் குறுகுறு விளையாட்டை விட மனமில்லா நடுவன் “அதுக்குள்ளேயா” என்றான்

  சின்னவனுக்கு கைப் பையில் மீனிரண்டும் துள்ளுவதைக் காண ஏதோ பண்ணியது.

  நேற்று முந்தினம் நடு நிசியில்

  வெள்ளம் வாசலுடைத்து வீட்டினுள் புகுந்து பாயில் தூக்கத்திலிருந்தனைப் புரட்டி

  கண் திறப்பதற்குள் கழுத்தளவு நீரில் வாய் நிரம்பி மூச்சடைத்து திணறி முங்கி காதில் மந்தமாய் பல கதறல்கள் கேட்டு

  யாரோ கைப் பற்றி மேல் தூக்கிக் கிடத்தி

  கருமேக வானம் பார்த்து சகதி மேட்டில்

  கிடந்த பயங்கரம் இன்னும் மீளவில்லை,

  சின்னவனுக்கு.

   தான் திணறிய சுவாசம் அவ்விரண்டு

  மீன்களும் அரைப் பை நீரில் துள்ளித் திணறுவதாய் நினைத்து, “அண்ணே மீன தண்ணீலியே விட்டுறுன்னே” என்றான் பதட்டமாய் சின்னவன்.

  ஆமாண்னே” மீன் விளையாட்டில் கண்ணாய் நடுவன்.

   “இருட்டப் போவுது வாங்கடா”

  பெரியவன் குரலுக்கு மறு பேச்சேது

  மூவரும் ஓட்டுப் பள்ளி நோக்கி

  ஒற்றையடிப் பாதையில் நடக்க

  முன்னால் சென்றவன் கைப் பையில்

  மீன்கள் குலுங்கியபடி…

  வேணான்னே” மறுபடி அழும் குரலில் சின்னவன்,

  சும்மா வாடா” தன் விளையாட்டு தடை பட்ட கோபத்தில் நடுவன்

  முன்னே வேகமாய் நடந்த பெரியவன் சட்டென நின்றான்.

  திரும்பி சின்னவனிடம்

  நேத்து வானத்துலேர்ந்து அரிசி மூட்ட மட்டும் தானே போட்டாங்கே, இந்த மீன ஆத்தாகிட்ட குடுத்தா சுட்டுக் குடுக்கும்ல, தங்கச்சி பாப்பா சப்பிக்கிட்டே ஒருவா கஞ்சி சேத்து குடிக்கும்ல ராவுல பசில அழுவாம தூங்கும்ல” என்றான்.

  ஏதோ புரிந்தது போல சமாதானமான

  சின்னவன் “அப்போ வீடு வரைக்கும் பைய நா தூக்கிட்டு வரேண்னே” என்று வாங்கிக் கொண்டான்.

  முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்தபடி

  மீன்கள் கண் நோக்கி “என்ன பண்றது தங்கச்சி பாப்பா பாவம்ல, வீடு வரைக்கும் பைத் தண்ணிக்குள்ள கொஞ்ச நேரம் உள்ளார போய் மூச்சு விட்டுக்கோங்க” என்றான், மனதில் நெருடும் இருவலியோடு.

  அதுவரை துள்ளிய மீன்கள்

  ஏதோ புரிந்தது போல

  நீரில் அமைதியாய் முகம் பொதிந்து அயர்ந்தன

  கருமேகம் விலகி அந்தி மாலை

  மஞ்சள் வெயில் கீற்றில் ஒற்றையடிப் பாதை

  தெளிவாய்த் தெரிந்தது முன்னே.

  #கதைக்குள்_ஒரு_கவிதை

                                                                   ~நளினி சுந்தரராஜன்.

  ஓடிவா ஓடிவா

  எங்கே எங்கே

  அதோ பார்

  அங்கே அங்கே!

  அருணனும்

  வருணனும்

  நேரெதிர் சந்தித்த 

  கொண்டாட்டமோ

  முகில் இழை கோர்த்து

  விண் பட்டாடையில்

  வண்ண ஜரிகைத்

  தைத்தனரோ?

  வளைவின் முடிவில்

  பொன் பானையுண்டாம்

  பொத்திக் காக்கும்

  சித்திரக் குள்ளனுண்டாம்

  புள்ளினம் மகிழும்

  முல்லை நிலமுண்டாம்

  ஓற்றைக் கொம்பு

  வெண் புரவியுண்டாம்

  பிணி போக்கும்

  அமுதசுரபி ஊற்றுண்டாம்

  வில் மறையும் முன்

  இன்னும் நூறு

  மாயக் கதைகள்

  பேசி மகிழ்ந்திட

  அறுபதுங் கூட

  ஆறாய் மாறிக் களித்திட

  அவ்வப்போது

  வாழ்வில்

  வேண்டும்

  வானவில்!

                         ~நளினி சுந்தரராஜன்.

  ஒலிக்கு மனதில் 

  ஒர் ஒளியுருவம்

  விழித் திறப்பை

  ஒத்தி வைக்கச் சொல்லும்

  நொடி நீண்டு

  யுகமாகக் கெஞ்சும்

  அட்சர ஸ்ருதியில்

  லயமாய்க் கரைந்து

  மீண்டும் மீண்டும்

  மூழ்கத் தூண்டும்

  மிகப் பிடித்தப் 

  பாடல் என்றென்றும்

  ரசித்தல் இனிது!

                                     ~நளினி சுந்தரராஜன்.

  தொலைந்திட 

  வேண்டும்

  காட்டுக்குள்ளே

  தொலைந்திட 

  வேண்டும்

  திசைக்கு சூரியன்

  வழிக்கு விண்மீன்

  குடிக்கத் தேன் சுனை

  புசிக்க மலைக் கனி!

  அடைந்திட அணில் பொந்து

  தூளியாட நெடு விருட்சம்

  அயர்ந்திட புல் படுக்கை

  ரசித்திட பால் வெளி!

  ஆடிக் களிக்க மயிலும் ஆனையும்

  பேசிச் சிரிக்க கிளியும் குருவியும்

  தாவிக் குதிக்க மந்தியும் மானும்

  பயந்து பதுங்க புலியும் கரடியும்!

  வண்டுகள் மீட்டும் ரீங்காரம்

  நீர்த் தவளை கூட்டும் சிறு நாதம்

  சர சரக்கும் சர்ப்பமொடு

  மயக்கும் குயிலின் தேவ கானம்!

  ஈரச் சருகின் சுகந்தம்

  நிசப்தத்தின் ஏகாந்தம்

  இறை நிகர் பரவசம்

  யாவருக்கும் வழங்கும் ஓரிடம்!

  வாழ்வின் சுழற்சியில்

  தொலைந்த நமை மீட்க

  சிரமேறிய கனமிறக்கி

  கவலை யாவும் மறக்க

  ஓர் நாளேனும்

  தொலைந்திட 

  வேண்டும்

  காட்டுக்குள்ளே

  தொலைந்திட 

  வேண்டும்…!

  ~நளினி சுந்தரராஜன்.

  Pin It on Pinterest