திரும்புதலுக்கான
தேதியிடப்படாத
பயணச் சீட்டு
வேண்டாமலே
அளிக்கப்பட்ட ஒன்று.
இன்றோ
நாளையோ
அடுத்த நொடியோ;
திரும்புதலென்பது
மெய்யின்றி
துணையின்றி
துரும்புமின்றி
வந்த வழியில்
கூட அல்லாது
மாற்றுப் பாதையில்
சடுதியில் செலுத்திடும்
மர்மப் பயணம்.
இருந்தும் கழுதைச்
சுமையாய்
ஆயிரம் பொதிகள்;
உறவாலும்,
பொருளாலும்,
உணர்வுகளாலும்;
உயிர்மெய் நோக
என்பு தேய
கட்டி இழுத்து…
எதற்கித்தனை
அசெளகர்யங்கள்?
அவ்வப்போது
ஆங்காங்கே
சுமைகளை பத்திரமாக
இறக்கிச் சென்றால்
இறகுப் பயணம்
சுகமாகுமே!
சாத்தியமாகுமா?
~நளினி சுந்தரராஜன்.