உயிர் வளி நின்ற
ஓருயிர் விட்டுச் சென்ற
நத்தைக் கூடொன்று
கிடைத்ததென்
கையில்;
உயிரினழகு
இன்னமும்
வட்ட வரிகளாய்
உதிர்ந்த சருகின்
எடையில்;
உடன் எடுத்துச் செல்ல
ஒர் உந்துதல்;
சென்ற உயிர்
திரும்பிடில்
உயிரற்ற கூடை
உயிரோடிணைக்கும்
கனவில்;
உணர்வின் மிகுதியில்
ஐவிரல் அணைப்பில்
காகித மெத்தையில்
பதமாய் சுருட்டுகையில்
நொறுங்கியது;
அச் சிறு ஓடும்,
என் இதயமும்,
சில்லுகளில்;
உதகம்
பிரிய மறுக்கும்
உயிரற்ற அக்கூடு
உணர்த்தியது,
உயிர் பிரிந்திடினும்
மெய் வேறிடம்
செல்லாது;
ஆங்கே
பதை படிவமாகுமேயன்றி
பற்றும் வேற்றுக் கரம்
ஒட்டாது!
~நளினி.