Virudhaisasi – www.worldpoetess.com
    Loading...

    ஊரடங்கில் உல்லாசம் கொள்ளும் உடமை மானிட…

    உண்டுவிட்டு உறங்கியது போதும் உடனே விழித்தெழு…

    இங்கே மின்மயானச் சுவர்களெல்லாம் மிரளுகின்றன…

    சுடுகாட்டு புதைகுழிகள் புலம்புகின்றன…

    வெட்டியானின் ஆயுதங்கள் அலறுகின்றன…

    ஒரு புறம் இந்நிலையென்றால் மறுபுறமோ

    சாலைவாசிகளை பசிக்கொடுமை வதைக்கின்றன..

    தினக்கூலிகள் வருமானமின்றி தவிக்கின்றனர்…

    உயிரினங்கள் உணவின்றி அலைகின்றன…

    இறப்புகளும் இழப்புகளும் இணைந்து வாட்ட

    முன்களப் பணியாளர் முந்திவந்து முனைப்பு காட்ட

    நீ மட்டும் உறங்கியது போதும்

    உள்ளபொருள் ஒவ்வொன்றையும் உற்றவருக்களி…

    தீநுண்மி தீண்டாமலிருக்க தீனியளி..

    தற்காத்து கொள்வதோடு தன்னினங்காத்திடு…

    உயிர்காக்க உயிர்வளி அளித்திடு…

    கல்லா மாந்தருக்கு காக்கும்முறை கற்றுக்கொடு…

    இழப்பைக் கண்டும் இரங்காது இருக்கின்றாயே..

    இன்னிலை தகர்க்க அகக்கண் இச்சையழித்து ஈகையளிக்க இசைந்து வா இந்நொடியே வா இருக்கும் உயிர் காத்திட

    ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து

    கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

    புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

    அரை உயிராய் தானுருகும் மெழுகவள்…

    உற்றதோர் துணையை இழந்த பின்பும்

    பெற்றதோர் பிள்ளையின் துன்பம் எண்ணி

    அற்றே கலங்காமல் அகங்காத்து தரங்குறையா

    பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்…

    நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

    தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

    படைதிரட்டி தரைப்போர் செய்து வெற்றி

    நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…

    அழுக்கூடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்

    அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்

    பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்

    தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

    விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

    அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து

    மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

    சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்…

    பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

    தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

    சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

    ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

    ஆழமிகு சொல்லகற்றி அன்றாட மொழிநோக்கி

    புழங்கு வார்த்தைக்கோர் பொருளகராதி ஆக்கி

    உழவனுற்ற துயரொன்றை கருவாக்கி களமாக்கி

    எழச்செய்த கரிசலாளன் எழுத்துநிற்கும் புகழோங்கி

    பெரியார்- அண்ணா

    சிந்தையிற் தெளிந்த செயலாலே சாதிசூழ்

    விந்தையினில் வேற்றுமை தானொழித்து -செந்தமிழால்

    மந்தை மொழியகற்றி உறவோடுல காளுஞ்சூரிய

    சந்திர அறிவுச் சுடர்கள்.

    Pin It on Pinterest