raji100 – www.worldpoetess.com
    Loading...

     

    நூல்

    பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்

    ஆசிரியர்

    :  ஈரோடு தமிழன்பன்

    பதிப்பகம்

    :  விழிகள், சென்னை

    மொத்தப் பக்கங்கள்

    :  196

    விலை

    :  ரூ 160/-

    மறு பதிப்பு

    :  2020

     

    வழக்கமாக நூலாசிரியரின் உரை “முன்னுரை”, “என்னுரை”, “முகவுரை” என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். ஆனால், இந்த நூலில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தம் உரைக்கு “கதவுரை” என்று புதுமையாகத் தலைப்பிட்டிருப்பதே தனித்துவமான தொடக்கமாக உள்ளது. பாவேந்தரோடு மட்டுமின்றி, அவருக்குப்பின் அவரது கொள்ளுப்பேரன், பேத்திகள் வரை இன்றும் பாவேந்தர் குடும்பத்துடன் தமிழன்பன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதைக் கதவுரை நமக்கு அறிவிக்கிறது. முனைவர் வ. ஜெயதேவனின் “பாட்டு இடையிட்ட உரைநடைக் காப்பியம்” என்ற தலைப்பில் அணிந்துரை, பேராசிரியர் சி. அ. சங்கரநாராயணனின் “பாரதியார்… பாரதிதாசன்… தமிழன்பன்” என்ற தலைப்பில் வாழ்த்துரை, விழிகள் திரு. தி. நடராசனின் பதிப்புரை, தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்த நாள் பரிசுப்பதிப்பாக இந்த நூலைப் பதிப்பித்துள்ள நியூயார்க் வாழ் சண்முகம் பெரியசாமியின் நன்றியுரை, “உங்களுக்காகப் பழைய நினைவுப் பதிவு”, “அறிஞர்கள் பார்வையில் தமிழன்பன்” எனப் பல அம்சங்கள் நூலின் வரவேற்புத் தோரண வாயில்களாக அணிவகுத்து, வாசகர்களை முழுவீச்சில் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவிக்கின்றன.  

     

    பாவேந்தருடன் தாம் பழகிய அனுபவங்களை 36 அத்தியாயங்களாக அமைத்துள்ளார் தமிழன்பன்.  பல அத்தியாயங்களில், முடிவுச் செய்தியை அந்தந்த அத்தியாயங்களின் இறுதியில் தராமல், அதன் தொடர்ச்சியை அடுத்த அத்தியாயத்தில் தந்திருக்கிறார். புத்தகத்தைத் தொடர்ந்து ஆர்வமுடன் வாசிக்க வாசகர்களைத் தூண்டும் இந்த புதுமையான உத்தியை  – வளரிளம் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ளலாம்!   

     

    1954இல் தமிழன்பன் கரந்தைப் புலவர் கல்லூரியில் மாணவர். அந்தச் சமயத்தில் கல்லூரி   ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்க, “ஆண்ட நாள் ஆண்ட பாண்டிய மன்னன் மீண்டது போல்” வந்திருந்த பாவேந்தரின் “முரட்டு முகத்தின்” அறிமுகம் கிடைத்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். கல்லூரிப் பேராசிரியர் இராமநாதன், “புரட்சிக் கவிஞருக்குப் பக்கத்தில் இரு! புரட்சிக் கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய்” என்று கூறியதும், “மின்மினியைத் துரத்திக் கொண்டிருந்தவனிடம் நட்சத்திரங்களை அள்ளிக் கையில் போட்டது போலாயிற்று” என்று விவரிக்கிறார் தமிழன்பன். அவர், பாவேந்தர் பேச்சைக் குறிப்பெடுத்து, தமிழ்ப்பொழில் – மார்ச் 1954 ஏட்டில், “அகமகிழ் விழா” என்ற தலைப்பில் எழுதிய நிகழ்ச்சித் தொகுப்பு, பாவேந்தரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அந்த ஏட்டின் அசல் புகைப்படம் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு.

     

    நூலாசிரியர் கதவுரையில் குறிப்பிட்டது போல், கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவில் கிடைத்த அறிமுகத்துக்குப் பின், தமிழன்பன் ஈரோட்டில் மதராசா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் சிதம்பரம், தஞ்சை, ஈரோடு, சென்னை போன்ற நகரங்களில் பாவேந்தரைச் சந்தித்துப் பழகி இருக்கிறார். ராசிபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பாவேந்தரின் தமிழாற்றல், கவிதை மேதைமை, தமிழின உணர்ச்சி, பாரதி நேயம், அழகியல் ஈடுபாடு ஆகியவற்றோடு, அவரது கனிந்த மனம், விருந்தோம்பல், வெகுளி, இசை ஞானம், அங்கதம், மறதி, பிடித்த உணவு வகைகள் போன்றவற்றையும் இந்நூலில் சுவைபட விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

     

    கவிதைகளிலோ கட்டுரைகளிலோ பிழை கண்டால் தழலாவது பாரதிதாசனின் இயல்பு என்றும் கடுங்கோபம் இல்லாமல் கனிவோடு திருத்தங்கள் செய்கிற நேரத்தில், அவர் கையில் பிரம்புக்கு பதிலாக மயிலிறகு இருப்பது போல் தோன்றும்என்றும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஒரு சமயம் பாரதிதாசன், “நான் செத்துவிட்ட பிறகு இப்படிப் பிழையெல்லாம் திருத்துவதற்கு ஆள் இல்லை என்று நினைக்கிறபோது – என் பிள்ளை செத்துப்போனால் எப்படி வருத்தப்படுவேனோ, அப்படி வருத்தப்படுகிறேன்” என்று கூறியது ஆசிரியரைக் கலங்க வைத்துவிட்டிருக்கிறது. தீர்க்கதரிசனமான பாவேந்தருடைய ஆழ்ந்த கவலை, மிக நியாயமானது என்பதை நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரையும் நெகிழ்ச்சியுடன்   உணர வைக்கிறது.

     

    பாரதிதாசனின் தோற்றத்தையும், முதிர்ந்த குரல் கடுமையையும் கருதி, அவர் பாடினால், “இடியின் கைகளில் ஒரு புல்லாங்குழல் கொடுத்தது போல், புயலின் கையில் மாலை தொடுக்கப் பூக்கள் கொடுத்தது போல்” இருக்கும் என்று முதலில் நினைத்திருந்த ஆசிரியர், அவர் சில சமயங்களில் பாடகர்களுக்கே பாடிக்காட்டிச் சரி செய்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்.

     

    “உன்னிடம் நல்ல தமிழ் ஆளுமை இருக்கிறது. உபயோகப்படுத்தினால் கதை. கவிதை எதை வேண்டுமானாலும் செய்து வெற்றி பெற முடியும்” என்று தமிழன்பன் அவர்களை ஊக்கப்படுத்தி, அவரது “நெஞ்சின் நிழல்” என்ற புதினத்தைப் பதிப்பிக்கப் பாரி நிலையத்தாருக்கு அவரை நேரடியாக அழைத்துச் சென்று பரிந்துரை செய்திருக்கிறார் பாவேந்தர். பாரதிதாசன் மேல் தமிழன்பனுக்கு  இருந்த பற்றையும், தமிழன்பன்பால் பாரதிதாசனுக்கு இருந்த கட்டற்ற பாசத்தையும் வெளிப்படுத்தும் பற்பல முத்தாய்ப்பான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று! என்னே பெரிய ஏமாற்றம்….. அந்நூல் நூல் வெளியாவதற்கு முன்பே பாவேந்தர் மறைந்தது, நூலாசிரியருக்கு எவ்வளவு மனவருத்தத்தை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

     

    “தான் வாழ வேண்டும் என்று மழை நினைப்பதில்லை; தான் வளர வேண்டும் என்று மண் விரும்புவதில்லை; தான் விண் தொட வேண்டும் என்று விதை ஆசைப்படுவதில்லை”- என்று தமிழாசை தவிர வேறு ஆசைகள் இல்லாது வாழ்ந்த பாரதிதாசனின் இதயத்திலும், “விமானப் பயணம் செய்ய வேண்டும், வெளிநாடுகள் பார்க்க வேண்டும்” என்ற சில விருப்பங்களும் இருக்கத்தான் செய்திருக்கின்றன. “கண் மூடும் வரை இவ்வெண்ணங்கள் அவருக்குக் கைகூடவே இல்லை… அவருக்கு மட்டுமா இழப்பு? அவர் கவிதைகளுக்கு இழப்பு. தமிழ் இலக்கியத்துக்கு இழப்பு. அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால் காவியங்களில் தம் பயணங்களைக் காலங்காலமாய் வாழச் செய்திருப்பாரே!” என்று ஆசிரியர் ஆதங்கப்படுவதைப் போல வாசகர்களுக்கும் இவ்வுணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. “அவரது பாண்டியன் பரிசு படமாகவில்லை; பாரதியார் வாழ்வு படமாகவில்லை. அவரது நிறைவேறாக் கனவுகளை இன்று நினைத்தாலும் ஏக்கமே பெருகுகிறது” என்றும் தமிழன்பன் நெகிழ்கிறார்.

     

    பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், காரைக்குடி திரு. சா. கணேசன், திரு. பெரியசாமி தூரன் ஆகியோரின் பரிந்துரையில் பாவேந்தருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருக்க வேண்டும். இப்பரிந்துரை பற்றிய செய்தியைக் கேட்ட பாவேந்தர், ஆசிரியரிடம், “இதில் வரும் ஒரு இலட்ச ரூபாயில் வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன் கவிதை, உன்னைப் போல எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச் சுட சுட அச்சிட்டுப் போட்டால் தமிழ்ப்பகை தன்னாலே ஒழிஞ்சு போகும்” என்று கூறியிருக்கிறார். இவ்வுரையாடல் செய்தி மூலம் பாரதிதாசன் தமிழின் நினைவாகவே, தமிழாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதை வாசகர்கள் உணர இயலும்! ஆனால், பரிசு கிடைப்பதற்கு முன்பே அவரது மறைவு ஏற்பட, “ஞானபீடப் பரிசு மலையாளக் கவிஞருக்குச் சென்றபோது, தன் மகனுக்கு அது கிடைக்காமல் போயிற்றே என்ற கவலை தமிழ்த்தாய் விழிகளில் அருவியாகக் கொட்டியது” என்று ஆசிரியர் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

     

    அன்றைய காலகட்டத்தில் பாவேந்தருக்கு இருந்த அரசியல் தொடர்புகள், கொள்கைகள் மேல் அவரது சமகால அறிஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்களுக்கு, பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் இருந்த போதும், பாவேந்தரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்று, புலமை மற்றும் அவரது எழுத்தின்பால் அவர்கள் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை நூலின் பல்வேறு அத்தியாயங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. தம் அரசியல் செல்வாக்கைத் தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாத பாவேந்தரின் உயரிய பண்புகள் போற்றத்தக்கவை.

     

    பாரதியாருடன் பத்தாண்டுகள் பழகியவர் பாரதிதாசன். பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர் ஈரோடு தமிழன்பன். இவரது அனுபவக்கோர்வையாக அமைந்துள்ள இப்புத்தகம் நம்மையும் பாரதிதாசன் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

     

    முதற்பதிப்புக்கு 2001இல் பேராசிரியர் அ. மா. பரிமணம் அவர்கள் எழுதிய கருத்துரை, பாவேந்தர் தம் கைப்பட ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள், வண்ணப்படங்கள் போன்றவைகளின் சேர்க்கைகள் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.  எண்ணற்ற கவித்துவமான வர்ணனைகள்- உவமைகள், புதிய சொல்லாட்சிகள் நூல் முழுவதும் விரவிப் பெருகி, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வளரிளம் படைப்பாளிகளுக்கும் விருந்து படைக்கின்றன. 

     

    நூலைப் படித்த பிறகு, அன்றைய கவி ஆளுமை பாரதிதாசன், இன்றைய கவிஆளுமை  தமிழன்பன் ஆகிய இருவருக்குமிடையே உள்ள பாசப்பிணைப்பைப் பற்றி வாசகர்கள் மனதில் ஏற்படும் பிரமிப்பான உணர்வை,  புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள தமிழன்பன் கவிதை வரிகள் மிகப் பொருத்தமாக எதிரொலிக்கின்றன. பாரதிதாசனோடு தாமும்  பயணித்த உணர்வு இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை .

     

    ஈரோடு தமிழன்பன் அவர்களின் “பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்” தமிழ் கூறும் நல்லுலகிற்கு மேலும் ஓர் அணிகலன். வாசகர்களின் வாசிப்புப் பசிக்கு ஒரு பல்சுவை இலக்கிய விருந்து!!   

    Pin It on Pinterest