punitha – www.worldpoetess.com
    Loading...

    கண்ணீர்

    திட்டினாலும்

    வருகிறது

    கொஞ்சினாலும்

    வருகிறது

    பிறர் துன்பத்திலும்

    வருகிறது

    தனக்கு என்ற

    போதிலும்

    வருகிறது

    எப்போதும் நிறைத்து

    வைத்திருக்கும்

    பொதுவுடமைக் கிணறு…

    பொதிமூட்டையைச்

    சுமக்கும் மனதிற்கு

    ஆறுதல் பரிசு….

    மனக்கரைசலை

    முகர்த்துக்கொண்டு

    வரும் முகிலின் சாயல்…

    தூதுஇலக்கியத்தில்

    இதுவும் ஒருவகை…

    மனதின் ஓலைக்கு

    மறுஓலை தந்துவிடும்

    கண்ணீராய்

    ஈரத்தில் அன்பு,இரக்கம்

    பரிதவிப்பு,ஆற்றாமை,

    இயலாமை அத்தனை

    மலர்களும் மலர்ந்துவிடும்

    வலி நிவாரணியாய்

    வந்து செல்கிறது

    வலி குறைந்தபாடியில்லை

    கண்ணீரும் குறைந்தபாடியில்லை

    மன இளகிகளுக்கு…

    ஓவென்று கத்தி

    ஒருநாள்

    தீர்த்துவிடவேண்டும்

    தீர்ந்து விடுமா வேதனைக்கிணறு

    உள்ளக் கிணற்றில்

    மிச்சமுள்ள

    நீரெல்லாம்

    மற்றவர் வடிக்க

    விட்டுச்சென்ற கண்ணீரா?

    தீர்த்துவிடவேண்டும்

    என்றுசொன்னாலும்

    தீர்வாய் விழிக்கரையில்

    ஒற்றைக்காலை

    நீட்டியக்கொக்காய் மனமீனைப்

    பிடிக்க துணைவரும்

    மயில்தோகையாய்

    வருடும் இக் கண்ணீருக்கு

    மனச்சான்று அதிகமாகவே உண்டு

    பிறக்கும் போது தொடங்கி

    இறப்பில் முடியும்

    இவ் இலக்கியத்திற்கு உரையாசிரியர்

    அவரவரே

    உரை எழுதி தீர்ந்தப்பாடியில்லை

    தொடர்கிறது ….

    ஆறுதல் தரவந்த

    கண்ணீர் இலக்கியம்

    செ.புனிதஜோதி

    மனிதன் மாறிவிட்டான்

    அன்றே சொன்னீர்

    தீர்க்கதரிசனமாய்

    கண்ணதாசரே….

    மனிதன்மாறிவிட்டான்

    ஆம்

    மாறித்தான் விட்டான்

    இன்னும் கொஞ்சம்

    சுயநலமாய்

    இன்னும் கொஞ்சம்

    மதத்திலும்

    இன்னும் கொஞ்சம்

    அறிவிலும்

    அவன் கண்ட மாற்றத்தைக்

    கண்டு அஞ்சிவிடாதே

    இன்றும் பாட்டை எழுதிவிட்டுப்

    போ …

    திருந்தட்டும்

    திருட்டு உலகம்

    சொல்கிறேன் கேள்

    ஆக்கமாய் எண்ணி

    அழிவின் பாதையில்

    பிணங்களாய் மாறிப்

    பணத்தோடு குடும்பம்

    நடத்த மாறிவிட்டான்

    இலக்காய் நோக்குவது

    இலக்கங்களை எண்ணுவதே

    அறிவியல் முதிர்ச்சியில்

    வீட்டைத் தீவாய்

    மாற்றித் தொ(ல்)லைபேசியை

    உறவாய் ஆக்கிக்கொண்டான்

    வளைதளம் வலைவிரிக்குது

    வாலிபக்கூட்டத்தை

    பள்ளிக்கூடத்திலும் காமலீலைகள்

    குருக்களின் தலைமையில்

    எட்டி நிற்கும் வானமாய்

    உறவுகளைத் தள்ளிவைத்து

    ஒட்டாமலே இளைய தலைமுறைகளை

    மாற்றிவிட்டான்

    அண்டைவீட்டுக்காரன்

    எட்டிப்பார்க்க முடியா

    எட்டு மைல் தூரத்தில்

    கால்களில் சக்கரத்தைக்

    கட்டிக் கொண்டு பறக்கின்றான்

    சாலையில்

    செத்துக்கிடந்ததாலும் எட்டிப்பார்க்க வருவதில்லை

    சுயநலநலத்தில் சுருங்கிக்

    கிடக்குது மானுடம்

    நாக்கின் சுவை அரும்புகள்

    கலப்படத்திற்கு அடமானம்

    வைத்து

    மருத்துவமனைக்கு வட்டி

    கட்ட மனிதன் மாறிவிட்டான்

    மனிதநேயம் பெயரில்

    ரொட்டித்துண்டை வீசி

    விளம்பரப்பிரியனாய்

    மாறிவிட்டான்

    குடிநீரைக் காசாய் மாற்றி

    குளத்தை அழிக்கும்

    வியாபாரத் திமிங்கலமாய்

    மாறிவிட்டான்

    விளைநிலமெல்லாம்

    விலைநிலமாய்…

    கட்டிடத்தையும்,

    பணத்தையும்

    உண்டுவாழ திட்டம்இடுவதாய்

    ஐ.நாசபை அறிவிப்பு

    எதுவுமில்லாதவர்களுக்கு

    தூக்குக்கயிறு

    உரம் மருந்து

    முன்னறிவிப்பு ஏதுமின்றியே

    விடைபெறும் வியர்வைக்கூட்டங்கள்

    மனிதம் மறந்த

    மானுடக்கூட்டம்

    இருப்பதற்கு இறந்து

    போகலாம் நீயே

    சொல்லிவிடுவாய்

    இயற்கையை அழித்துச்

    செயற்கையோடு வாழ்வதே

    அறச்சிந்தனையாய் எண்ணும்

    பரிசோதனைக்கூடத்து

    வித்தாய் மனிதன் மாறிவிட்டான்

    பகுத்தறிவுப் பெயரில்

    திருமணமில்லா வாழ்க்கை

    தந்தையில்லா குழந்தைகளின்

    அணிவகுப்பு

    மாற்றமும் இவனோடு

    வேள்வி செய்கிறது

    மனிதனாய் மாறச்சொல்லி

    இயற்கையும் வீட்டுச்சிறைக்குள்ளே

    பூட்டி வைத்து விளையாடுகிறது

    இன்னும் மாறவில்லை

    மனிதன்

    இனிமேலும் மாறுவானா ?

    நீயே தீர்க்கதரிசனத்தில்

    சொல்லிவிட வந்துவிடு

    கண்ணதாசனே.

    செ.புனிதஜோதி

    மனமெல்லாம் வருடும்

    மணிகுயிலின்

    ஓசை!!!

    அதுபோல

    உந்தன் குரலை

    என்னோடு துணைக்கு

    அனுப்பிய

    தூதுவனே!!!

    திக்கெற்றக்

    காட்டில்

    திசை மாறும்

    பொழுதெல்லாம்

    வழிக்காட்டியாய்

    வரும்

    மின்மினிப்பூச்சியின்

    பின்னச்சிறகின்

    ஒளிரும் ஒளியாய்

    வருவாயே!!!

    கரடுமுரடான

    பாதையில்

    அடிமேல்அடி எடுத்து

    வைக்கப் பாதசுவடாய்

    என் மனதோடு நிலைப்பாயே!!!

    அஞ்சி நிற்கும்

    வேளையிலும்

    அஞ்சாமல் இருக்க

    கம்பு சுத்தும்

    உன் ஆட்டத்தை

    என் நெஞ்சோடு வீரமாய்

    பதித்தாயே!!!

    கணக்கு போட

    திரணியத்துக்கிடக்கையில்

    மாகாணி,அரைக்காணி

    கணக்குப்பாடத்தை

    என் நெஞ்சோடுப் புதைத்தாயே!!!

    சோம்பலான நேரம்

    சோம்பித் திரியேல்

    ஒளவையார் பாடலை

    உன் சீர்காழி குரலில்

    பரிசாகத் தந்தாயே!!!

    என் வழித்துணைக்கு

    நீர் விட்ட விதையின்

    விருட்சத்தில் நிழலாய்

    வாழ்கின்றேன்

    உந்தன் மணிக்குயில்

    அப்பா….

    முத்தான சொற்கள் முகிலாய் மறைத்தாலும்

    மத்தாக தோய்க்கவே மூளையைக் கிட்டுமே

    வித்தான சொல்லாய் விடைகள் பலவந்தும்

    முத்தாக நிற்குமே நூல்.

    இளமையிலே காதல்வரும்

    முதுமையிலும் தொடர்ந்து வரும்

    மனதினிலே நினைத்து விட்டால்

    மயக்கமூட்டும் தேன்சாரல் விழும்

    மலரைச்சுற்றி வந்தக்காலத்தில்

    மதுக்குடமாய் அவள் நினைவிருக்கும்

    கனவினிலே தேன்சாரல் தெளிக்கும்

    காட்சி விரிப்பில் அது இனிக்கும்

    புத்தகம் தொடும்போதும்

    புத்தாக்கம் செய்யும் போதும்

    கற்றைக்குழலியின் நினைவுவரும்

    காற்றோடு அவள்பேசிய

    தெள்ளு தமிழ் சாரல் விழும்

    குற்றால அருவியிலே

    கொவ்வை மலர் சிரிப்பினிலே

    வண்டு வந்து அமர்ந்து

    வாலிபத்தைக் கரைக்கையிலே

    பட்டுத்தெறித்த முத்தத்துளியிலே

    பதறிவிழுந்தத் தேனடையாலே

    சிதறிக் கலந்ததுவே

    அதுஅவள் உவகையில்

    சிதறிக்கலந்ததுவே

    என் சிந்தையில் நாளும்

    வந்தமரும் சித்தனவாசலின்

    ஓவியமே என் மனதை மயக்கும்

    குற்றால மலையின் தேன்சாரல் மழையே

    அவள் உவகையில் உண்டு மகிழ்ந்து

    கண்டு தெளியாத வண்டினமே

    அவள் நினைவில்நித்தம்

    குளிக்கும் தேன்சாரல்மழையே

    அய்யோ… அது தேன்சாரல் மழையே

    செ.புனிதஜோதி

    *வந்துவிட்டு…போ…*

    கோர்க்கமுடியாதவார்த்தைகளால்

    கோர்வையாய்

    எழுதினாலும் தீர்க்கவாமுடியும்

    என்தனிமையை….

    நிறைந்துக் கிடக்கும்

    மௌனத்திற்குள்

    ஒளிந்துக்கொண்டு

    மீட்டுகிறாய்

    வீணையை…

    நரம்புகளில்

    நீ…நீ…ஸ்வரமே

    கேட்கும்…

    கேட்டுப்பார்க்க

    ஒரு நிமிடம்

    என் வாசல்வழியே

    வந்து விட்டு

    போயேன்…

    செ.புனிதஜோதி

    மறந்து மறைந்து

    போன நெறிமுறைகள்

    ஒழுக்கத்தின் சுவடுகளை

    அழித்து இடுகாடாய்

    மாறிவரும் இல்லங்கள்

    இல்லாள்

    வெளியேறியவுடன்

    நேற்றுவரை

    பத்தியும்,சாம்பிராணியும்

    பக்தியாய்

    மணந்த வீட்டில்

    சாராய வாடையில்

    நனைத்தெடுக்க நண்பர்களுக்கு

    அழைப்புமணி விடுகிறாய்

    அவள் சேமித்து வைத்த

    ஒழுக்கநெறி,ஒவ்வொரு மூலையிலும் காண்பித்த

    தீப ஆராதனை,நலம்,அக்கறை

    அத்தனையும் இடித்து

    சாரயக்கட்டடமாய்

    மாற்றிக்கொண்டிருக்கிறாய்

    இல்…ஆம் என்ற விகுதியை

    இழந்து அழகியலைத் துறக்கிறது

    1. செ.புனிதஜோதி

    வசந்தவாசல் திறப்பு*

    சுட்டெரிக்கும் சூரியனின்

    ஒளியின் சாரல்

    பட்டுத்தெறித்து

    பால் மழையாய்

    பொழிகின்றாயே

    வெண்ணிலவே…

    அருள்பொழியும்

    ஞானொளியால்

    அணைக்கின்றாய்

    வெம்மையினை…

    சீத அழகாய்

    உருமாறி

    நிறைக்கின்றாய்

    உன் அழகை….

    தொடு வானத்தூரத்தை

    குளத்தில் பூட்டி

    தொட்டு விட

    சொல்லியே அழைக்கின்றாய்….

    மதி ஞானம்

    கொண்டவளே

    மதம் போல

    எம்மீது ஏவுகின்றாய்….

    சுகமானராகமாய்

    லாவணிப்பாடுகின்றாய்….

    விடியலின் முகத்தை

    ஆழியில் கரைத்து

    விளையாட்டுக்

    காட்டுகின்றாய்…

    விடியாத என்கூரைக்குள்

    ஒளிவிளக்காய்

    மாறுகின்றாய்….

    வெள்ளிச்சிரிப்

    பொலியில்

    வீதியெங்கும் பிள்ளைமொழியாய்

    கலகலத்தேக்

    கிடக்கின்றாய்….

    கூச்ச நாச்சமின்றி

    கூசாமல் என்விழியோடு

    மொழிஅழகைக் கரைக்கின்றாய்…

    மரக்கிளைகளுக்கு இடையே

    மகிழம்பூ மணத்திற்கு நடுவே

    மதிமயங்கி கொஞ்சும் புள்ளினத்தின் சிருங்காரொலியை

    ரசனையோடு

    என் செவிகளுக்குள்

    விதைக்கின்றாய்…

    மாறன் மழையை

    சீத அழகால் பூமிப்பந்தில்

    தெளித்துவிட்டு

    வானமெங்கும் பூக்கோலம்

    போடுகின்றாய்…

    வசந்தவாசலின் பள்ளியறையை

    திறந்துவிட்டு ஆம்பலாய் மணக்கின்றாய்.

    செ.புனிதஜோதி

    துள்ளிக்கின்ற கெண்டை

    மீன்கள்  அலையோடுப் போட்டி

    போட

    புத்திக்கெட்ட மீன்கள்

    மண்ணில்

    கொஞ்சம் விழ

    துடிதுடித்து போனபின்னே

    மின்னல் போல வந்து பாய

    அனுபவங்கள்

    மெல்லமெல்ல பாடம் புகட்ட

    உறங்குகின்றன

    உள்ளொளிகள்

    வெளிச்சம்போட்டு நடக்க

    மேகங்கள் திரைப்போட்டு

    நடை போடுவதைப் போல

    நம்குள்ளே முடங்கிக்கிடக்கும்

    ஞானொளி அனுபவத்தின்

    வாயிலில் நிற்க

    விழித்து எழுவதற்குமுன்

    அடுத்த இடைஞ்சல்கள் வந்து

    கதவைத் தட்ட

    மெல்ல மெல்ல

    கால்எடுத்து

    வைத்த போதும்

    சறுக்கிக் கொண்டு போக

    மற்றொரு அனுபவங்கள்

    கைப்பிடித்துத் தூக்க

    அனுபவ அலை ஓய்ந்தபின்பே

    ஞானொளிப்பிறக்க

    வாழ்க்கை தன் கவிதைக்கு

    முடிவுரை எழுதி முடிக்க

     

    செ.புனிதஜோதி

    Pin It on Pinterest