நடமாடும் தெய்வம் – அம்மா
காரிருள் கசங்கியப் பையுள்
ஒரு துளி உதிரத்தில் உருவாக்கி
குருதி கிடங்கில் வளர்த்து
உயிரோட்டமான உலகை எனக்கு
உயிராய் அறிமுகம் செய்தவள்
உருக்கொண்ட நாள் முதல்
உதைத்தே வளர்ந்தேன் நானும்
வலியிலும் என் வரவை மகிழ
வலிமையுடன் உயிருக்குப் போராடியவள்
சுள்ளி விறகால் செய்த சமையலும்
கால்வயிற்றை மட்டும் நிறைத்திட
பட்டினியில் தான் உழன்றாலும்
பசியறியாது என்னை வளர்த்தவள்
மேல்சட்டைக் கிழிசலை மறைத்து
மானம் காத்திட விரைந்த முந்தியை
கார்முகில் பிரசவித்த முதல்துளிக்கே
என்சிரம் மேல் குடையாய் விரித்தவள்
என்னுள் ஆழ உழுது தீரத்தை வித்திட்டு
அன்பை உரமிட்டு பண்பாய் வளர்த்தவள்
என் நடைக்கு ஊன்றுகோலான விரலை
என்வாழ்வை முன்னேற்ற ஏணியாக்கியவள்
குருதியை உணவாக்கி நெகிழ்ந்ததே நின் மாரும்
குவலயத்தில் உன்தன் மடியே ஈடில்லா சொர்க்கம்
தன்னிகரில்லா அன்னையே நடமாடும் தெய்வம்
முனைவர் தனலட்சுமி பரமசிவம்
கன்னியாகுமரி மாவட்டம்
இந்தியா.