போகி
———
இன்று இருந்திருந்தால்
வயது நூறுக்கு மேலிருக்கும்
பக்கத்து வீட்டு மாமி
கொடுத்த தேன்குழல் நாழி;
வடாம் கொத்தி
காகம் விரட்ட மட்டுமே
வைத்திருக்கும்
கோவக்கார தாத்தாவின்
கைத்தடி;
நடுங்கும் கைகள்
நேர்த்தியான கோர்வைகள்
மூச்சுள்ள வரை
பாட்டி பின்னிய கம்பளிச்
சால்வைகள் ஒன்றிரண்டு;
இதிலிருப்பவர் பலர்
இன்றில்லை என
கல்லூரிக்கால நினைவில்
நெகிழும் அப்பாவின்
செல்லரித்த குழுப்படம்;
பேதையாய் தான்
வளர்த்த கலை மறந்து
குடும்பக் கலையில்
தனை இழந்த அம்மாவின்
கவிதைக் குறிப்பேடுகள்;
இதழ்கள்
உதிர்ந்த காம்பாய்
யாரோ நினைவாய்
மயிலிறகு,
பெற்று மறைத்த,
கொடுக்க மறந்த
வாழ்த்தட்டைகள்;
ஏலம் போன
பூர்விக வீட்டின்
சாளரக் கட்டைகள்,
நியாபகக் கத்தைகளாய்
சில நூறு மடல்கள்,
கனத்த நாட்குறிப்பு புத்தகங்கள்;
ஆயிரம் கதைகளோடு
அண்டாவும் குண்டாவும்,
நடை வண்டி முதல்
முக்காலி வரை
எத்தனையோ இத்யாதிகள்;
அனைத்தும்
பழையன கழிதலாய்
ஒழிக்க ஒண்ணாமல்
தூசு நீக்கி மீண்டும்
பரணில் ஏத்துகையில்
மறையும் நினைவுகளை
மனதில் புதிதாய்
புகுத்தும் பண்டிகை
போகி!
~ நளினி சுந்தரராஜன்.
Wisconsin, USA.