Loading...

    எங்களைப் பற்றி

    உலகளாவிய பெண்களின் எழுத்துத் திறமையை வெளிக்கொணரும் நோக்கில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாநகரை மையமாக வைத்து, சனவரி 2020ல் உலகப் பெண் கவிஞர் பேரவை, புதுச்சேரியின் கவிஞர் திரு.அமிர்தகணேசன் (அகன்) அவர்களால் உருவாக்கப்பட்டது.

    இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலிருந்து 75க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் மற்றும் நூலாசிரியர்கள் இணைந்து தம் படைப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவர்களால் சில கவியரங்க நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டு அமெரிக்கத் தமிழ் வானொலி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    பெண்களின் படைப்புகளைக் கொண்ட, அழகிய வடிவமைப்புடன் கூடிய “வல்லினச் சிறகுகள்” என்ற மாதாந்திர மின்னிதழ் செப்டம்பர் 2020ல் தொடங்கப்பட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேரவை உறுப்பினர்கள் இணைந்து, இவ்விதழை உருவாக்கி வருகிறார்கள். இதில் மலரும் மரபு, இலக்கியம் சார்ந்த சிறப்புக் கவிதைகள், சங்கப் பலகை என்ற தலைப்பில் நூல் மதிப்புரை, “உலகப் பெண் கவிஞர் யார் எவர்?” பகுதி, சுர ஊர்வலம், மறுவாழ்வளிக்கும் மருத்துவமங்கையர், அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள், பெருமைக்குரிய பெண்கள் போன்ற நேர்காணல்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலகப் பெண் கவிஞர்களின் பல்வகைப்பட்ட கவிதைப் படைப்புகள், அகன் பக்கம், மகாகவி ஈரோடு தமிழன்பன் பக்கம் போன்றவை வெளியிடப்பட்டு வருகின்றன.

    பெண்களுக்கான பெண்களே நடத்தும் மின்னிதழ் மற்றும் இணையதளம்.

    மெல்லியலாளரின் படைப்புத்திறன்
    வல்லினமாகி வளமோங்கிட மெல்லின மகளிரால் சிறகு விரிக்கும் வல்லினச்சிறகுகள் இணையதளம்
    இது www.wordpoetess.com!

    இறகுகளாய் உங்கள்
    படைப்புகளைத் தாருங்கள் தோகையரே
    சிறகு செய்து தருகிறோம்.
    பறந்து பறந்து
    தமிழ் அலகால்
    சூரியனைக் கொத்தி
    வீரிய வெளிச்சம்
    கொண்டுவாருங்கள்
    யுக யுகமாய் வேரூன்றியுள்ள அடிமை இருள் நீக்குவோம்!

    இத்தளத்தில் நாள்தோறும் உலகளாவிய அளவில் பெண்கள் தம் கவிதைகளைப் பதியலாம். சிறந்தவை வல்லினச் சிறகுகள் இதழில் இடம் பெறும்; நூலாக்கம் பெறும்; விருதுகளும் பரிசுகளும் பெறும். “மரபு அறிவோம்” என்ற பகுதி மூலம் மரபுக்கவிதை இலக்கணமும் அறிந்து கொண்டு பயன்பெறலாம். இதன் மூலம் புதிய படைப்பாளிகளைப் புவனத்திற்கு அறிமுகப்படுத்துவோம். தொடர்ந்து பயணிப்போம், புதிய உலகம் படைப்போம்.

    “தீப்பந்தமும் எங்கள் எழுத்துகளே
    தீபமும் இனி எங்கள் வார்த்தைகளே!”

    உலகப் பெண் கவிஞர்கள் பேரவை

    – இது www.worldpoetess.com

    Pin It on Pinterest

    Share This