ஓடிவா ஓடிவா
எங்கே எங்கே
அதோ பார்
அங்கே அங்கே!
அருணனும்
வருணனும்
நேரெதிர் சந்தித்த
கொண்டாட்டமோ
முகில் இழை கோர்த்து
விண் பட்டாடையில்
வண்ண ஜரிகைத்
தைத்தனரோ?
வளைவின் முடிவில்
பொன் பானையுண்டாம்
பொத்திக் காக்கும்
சித்திரக் குள்ளனுண்டாம்
புள்ளினம் மகிழும்
முல்லை நிலமுண்டாம்
ஓற்றைக் கொம்பு
வெண் புரவியுண்டாம்
பிணி போக்கும்
அமுதசுரபி ஊற்றுண்டாம்…
வில் மறையும் முன்
இன்னும் நூறு
மாயக் கதைகள்
பேசி மகிழ்ந்திட
அறுபதுங் கூட
ஆறாய் மாறிக் களித்திட
அவ்வப்போது
வாழ்வில்
வேண்டும்
வானவில்!
~நளினி சுந்தரராஜன்.