வசந்தவாசல் திறப்பு*
சுட்டெரிக்கும் சூரியனின்
ஒளியின் சாரல்
பட்டுத்தெறித்து
பால் மழையாய்
பொழிகின்றாயே
வெண்ணிலவே…
அருள்பொழியும்
ஞானொளியால்
அணைக்கின்றாய்
வெம்மையினை…
சீத அழகாய்
உருமாறி
நிறைக்கின்றாய்
உன் அழகை….
தொடு வானத்தூரத்தை
குளத்தில் பூட்டி
தொட்டு விட
சொல்லியே அழைக்கின்றாய்….
மதி ஞானம்
கொண்டவளே
மதம் போல
எம்மீது ஏவுகின்றாய்….
சுகமானராகமாய்
லாவணிப்பாடுகின்றாய்….
விடியலின் முகத்தை
ஆழியில் கரைத்து
விளையாட்டுக்
காட்டுகின்றாய்…
விடியாத என்கூரைக்குள்
ஒளிவிளக்காய்
மாறுகின்றாய்….
வெள்ளிச்சிரிப்
பொலியில்
வீதியெங்கும் பிள்ளைமொழியாய்
கலகலத்தேக்
கிடக்கின்றாய்….
கூச்ச நாச்சமின்றி
கூசாமல் என்விழியோடு
மொழிஅழகைக் கரைக்கின்றாய்…
மரக்கிளைகளுக்கு இடையே
மகிழம்பூ மணத்திற்கு நடுவே
மதிமயங்கி கொஞ்சும் புள்ளினத்தின் சிருங்காரொலியை
ரசனையோடு
என் செவிகளுக்குள்
விதைக்கின்றாய்…
மாறன் மழையை
சீத அழகால் பூமிப்பந்தில்
தெளித்துவிட்டு
வானமெங்கும் பூக்கோலம்
போடுகின்றாய்…
வசந்தவாசலின் பள்ளியறையை
திறந்துவிட்டு ஆம்பலாய் மணக்கின்றாய்.
செ.புனிதஜோதி