மனிதன் மாறிவிட்டான்
அன்றே சொன்னீர்
தீர்க்கதரிசனமாய்
கண்ணதாசரே….
மனிதன்மாறிவிட்டான்
ஆம்
மாறித்தான் விட்டான்
இன்னும் கொஞ்சம்
சுயநலமாய்
இன்னும் கொஞ்சம்
மதத்திலும்
இன்னும் கொஞ்சம்
அறிவிலும்
அவன் கண்ட மாற்றத்தைக்
கண்டு அஞ்சிவிடாதே
இன்றும் பாட்டை எழுதிவிட்டுப்
போ …
திருந்தட்டும்
திருட்டு உலகம்
சொல்கிறேன் கேள்
ஆக்கமாய் எண்ணி
அழிவின் பாதையில்
பிணங்களாய் மாறிப்
பணத்தோடு குடும்பம்
நடத்த மாறிவிட்டான்
இலக்காய் நோக்குவது
இலக்கங்களை எண்ணுவதே
அறிவியல் முதிர்ச்சியில்
வீட்டைத் தீவாய்
மாற்றித் தொ(ல்)லைபேசியை
உறவாய் ஆக்கிக்கொண்டான்
வளைதளம் வலைவிரிக்குது
வாலிபக்கூட்டத்தை
பள்ளிக்கூடத்திலும் காமலீலைகள்
குருக்களின் தலைமையில்
எட்டி நிற்கும் வானமாய்
உறவுகளைத் தள்ளிவைத்து
ஒட்டாமலே இளைய தலைமுறைகளை
மாற்றிவிட்டான்
அண்டைவீட்டுக்காரன்
எட்டிப்பார்க்க முடியா
எட்டு மைல் தூரத்தில்
கால்களில் சக்கரத்தைக்
கட்டிக் கொண்டு பறக்கின்றான்
சாலையில்
செத்துக்கிடந்ததாலும் எட்டிப்பார்க்க வருவதில்லை
சுயநலநலத்தில் சுருங்கிக்
கிடக்குது மானுடம்
நாக்கின் சுவை அரும்புகள்
கலப்படத்திற்கு அடமானம்
வைத்து
மருத்துவமனைக்கு வட்டி
கட்ட மனிதன் மாறிவிட்டான்
மனிதநேயம் பெயரில்
ரொட்டித்துண்டை வீசி
விளம்பரப்பிரியனாய்
மாறிவிட்டான்
குடிநீரைக் காசாய் மாற்றி
குளத்தை அழிக்கும்
வியாபாரத் திமிங்கலமாய்
மாறிவிட்டான்
விளைநிலமெல்லாம்
விலைநிலமாய்…
கட்டிடத்தையும்,
பணத்தையும்
உண்டுவாழ திட்டம்இடுவதாய்
ஐ.நாசபை அறிவிப்பு
எதுவுமில்லாதவர்களுக்கு
தூக்குக்கயிறு
உரம் மருந்து
முன்னறிவிப்பு ஏதுமின்றியே
விடைபெறும் வியர்வைக்கூட்டங்கள்
மனிதம் மறந்த
மானுடக்கூட்டம்
இருப்பதற்கு இறந்து
போகலாம் நீயே
சொல்லிவிடுவாய்
இயற்கையை அழித்துச்
செயற்கையோடு வாழ்வதே
அறச்சிந்தனையாய் எண்ணும்
பரிசோதனைக்கூடத்து
வித்தாய் மனிதன் மாறிவிட்டான்
பகுத்தறிவுப் பெயரில்
திருமணமில்லா வாழ்க்கை
தந்தையில்லா குழந்தைகளின்
அணிவகுப்பு
மாற்றமும் இவனோடு
வேள்வி செய்கிறது
மனிதனாய் மாறச்சொல்லி
இயற்கையும் வீட்டுச்சிறைக்குள்ளே
பூட்டி வைத்து விளையாடுகிறது
இன்னும் மாறவில்லை
மனிதன்
இனிமேலும் மாறுவானா ?
நீயே தீர்க்கதரிசனத்தில்
சொல்லிவிட வந்துவிடு
கண்ணதாசனே.
செ.புனிதஜோதி