மழலை மாறா ஏழாம் அகவையில்
தமிழ்ப்பாடும் பாரதி கரம்பற்றி
பதிந்த முத்தத்தில் நாணம் பீறிட
ஒளிந்து கொண்ட பேதைமகள்
கஞ்சிக் குடிக்க வழியில்லை வீட்டில்
மிஞ்சியதோ கரைத்த ஷெல்லியும் பைரனும்
தஞ்சம் கொண்ட வறுமையை
நெஞ்சில் துணிவோடு சந்தித்தாள்
பாரதிக் கவிதைகளின் தையல்நாயகி
பார்வியக்கும் புதுமைப்பெண்ணாய் ஞானச்செருக்குடன்
தாயின் பரிவுடன் அன்பைப் பகிர்ந்திட
தாரத்தின் கனிவினை இல்லறத்தில் ஊட்டினாள்
கவிதை வானில் வட்டமிட்டப் பறவையின்
அபிமான ரசிகையான மாண்புடையாள்
பாரதியின் கவிதைப் புதையல்களைத் தளராது
பாருக்குத் தேடி தந்த நன்னடையாள்
இன்னல்கள் கண்டு பதறாத மனதிடம்
பன்முகத்திலும் சிதறாத எண்ணங்கள்
தடுமாற்றம் காணா தீர்மானங்களுக்கு
மௌனமே உத்தியாக கையாண்டாள்
பிறர் வியந்த வாழ்க்கைப் பயணத்தில்
பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்த
நிறம் மாறா கடையத்து மலரே நாம்
மறந்த பாரதியின் செல்லம்மாள்!