kowsy – www.worldpoetess.com
  Loading...


  “ஓதற் கெளிதா யுணர்த்தற் கரிதாகி
   வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
   உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
   வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

  என மாங்குடி மருதனார் திருக்குறளின் புகழை  மனதார வாழ்த்தியுள்ளார். எக்காலம் வாழ்ந்தாலும் மனிதன் அக்காலத்திலும் தவறுகள் செய்துகொண்டே இருப்பான் என்பதற்கு, நாம் வள்ளுவரைக் கற்கும் போதும், நாம் வாழுகின்ற அநுபவங்களை உற்று நோக்கும்போது உணரக்கூடியதாக இருக்கின்றது. திருக்குறளைப் புரிந்து கொண்டு எம்மிடமுள்ள   அழுக்குகளை அகற்ற, கற்பதற்கு இலகுவாகவும் கருத்தில் கொள்வதற்கு எளிமையாகவும் இருக்கும் திருக்குறளை கற்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. 
                   
  ஆரம்பத்தில் எழுத்தாணியால் ஏட்டிலே எழுதப்பட்ட திருக்குறளின் தாய் நான்தான் என்று வள்ளுவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனது மொழி தமிழ்மொழிதான் என்று எந்த இடத்திலும் வரிகளால் வடிக்கவில்லை. திருக்குறள் என்று பெயர் கூட வைக்கவில்லை. முப்பால் என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. பின் குறள் வெண்பாவால் எழுதப்பட்டதனால் குறள் எனப்பட்டு, அதன் சிறப்பு நோக்கி திரு என அடைமொழி கொடுக்கப்பட்டு திருக்குறள் எனப்பட்டது. வள்ளுவர் தன் நூலில் எந்த இடத்திலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ ஒரு இடத்திலும் எழுதவில்லை. ஒரு கடவுளின் பெயர் கூட அதில் எழுதி வைக்கவில்லை.
   
  திருக்குறள் பிறரைச் சென்றடைவதற்கு முதற்காரணமானவர் ஒளவையாரே. தமிழச்சங்கத்திலே திருக்குறள் அரங்கேற ஒளவையாரே சிபாரிசு பண்ணி அரங்கேறச் செய்தார். 
   
   
  “தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்
   கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்”
   
          என்று அவரே திருக்குறளின் பெருமையைப் பாராட்டியுள்ளார். 
   
            அதன்பின்தான் புலவர்கள் போற்றினர். ஆனால், 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதல் திருக்குறள் அச்சிடப்பட்டது. அதுவே உலகெங்குமுள்ள மக்களைச் சென்றடைவதற்குக் காரணமானது. ஆனால் வள்ளுவரை நாம் இனம்காணக் காரணமானவர்கள் உரையாசிரியர்களே அவர்கள் இல்லையென்றால், திருக்குறளைத் துளிகூடப் புரிந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும். எனவே வள்ளுவருக்குக் கொடுக்கும் அதே அந்தஸ்தை உரையாசிரியர்களுக்கும் நாம் கொடுக்கவேண்டியது அவசியமாகின்றது. அதுவே காலமாற்றத்திற்கேற்ப புரிந்து கொள்ளும்படியாக அமைவதே சிறப்பாகின்றது. 
   
                   திருக்குறளை எழுத்தெண்ணிப் படிக்கும்போது அதன் பொருள் மனதுள் அடங்கி மனதைத் திருத்தும் பணியைச் செய்கின்றது. எழுத்தெண்ணிப் படித்தல் என்னும் போது திருக்குறள் 1330 குறள்களால் எழுதப்பட்டது. மொத்த சொற்கள் 14,000. மொத்த எழுத்துக்கள் 42,194. அதிகாரங்கள் 133. அறத்துப்பாலிலுள்ள குறள்பாக்கள் 380. பொருள்பாலிலுள்ள குறள்பாக்கள் 700. காமத்துப்பாலில் 250. னி என்ற எழுத்துத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1705 தடவைகள். ஒள என்ற எழுத்து வரவில்லை. தமிழ் எழுத்துக்கள் 247 இல்,37 எழுத்துக்கள் இடம்பெறவில்லை. அனிச்சம், குவளை என்னும் மலர்களும் நெருஞ்சிப்பழம் என்னும் ஒரு பழமும் குன்றிமணி என்னும் ஒரு விதையும், பனை, மூங்கில் என்று இரு மரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோடி என்னும் சொல் ஏழு இடங்களிம், ஏழு என்னும் சொல் எட்டுக் குறள்களிலும் இடம்பெற்றுள்ளது( தகவல்- இணையம்)  என்று எழுத்தை எண்ணிப் படிப்பதில்லை. அதில் வந்திருக்கின்ற எழுத்துக்களை எண்ணிப் பார்த்தல் அதாவது நினைத்துப் பார்த்துப் படிக்க வேண்டும். 
   
              
             உதாரணமாக “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” எழுத்துக்களெல்லாம் அகரம் முதலாக உள்ளது. அதுபோல் உயிர்களுக்கெல்லாம் இறைவன் முதலாக இருக்கின்றார். என்னும் போது இங்கு யாராவது எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதல் என்பதை எண்ணிப்பார்த்து அதாவது நினைத்துப் பார்த்து எழுத்துக்களுக்கெல்லாம் முதலாவது அகரம் என்று எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணிப் பார்க்கும்போது தமிழ் எழுத்துக்களுக்கு   முதலாக அகரம் இருப்பது போல் என்று விளங்கிக் கொள்ளமுடியும் வள்ளுவரும் வெற்றிகொள்வார்.
   
                    திருக்குறள் ஒரு வாழ்வியல் கூறும் இலக்கியம். வாழ்வியலை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் திருக்குறளைப் படிப்பதில் பயனே இல்லை. 
          
              வள்ளுவரின் இந்த தற்புகழ்ச்சி இல்லாத பண்பே அவரின் நூலை   உலகப் பொதுமறையாக கொண்டுவந்திருக்கிறது. கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்னும் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தனது நூலென்று எழுதாததற்கு அவரது தற்புகழ்ச்சி அற்ற பண்பே காரணமாகின்றது. அவரே ஓரிடத்தில் சொல்கின்றார். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம் என்று. அர்ச்சுனன் போர்க்களத்தில் வில் கூட்டத் தயங்கிக் கொண்டிருந்த போது இவ்வாறு என் உறவுகளைக் கொல்வதை விட நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூறினானாம். அப்போது  கிருஸ்ண பரமாத்மா அர்ச்சுனா! உன்னை நீ புகழ் என்றாராம். அப்போது அர்ச்சுனர் என்னை நான் புகழ்தல் ஒரு பண்பல்ல என்றாராம். அப்போது பறவாயில்லை உன் வில்லைப்பற்றி புகழ் உன் வீரத்தைப் பற்றிப் புகழ் என்றாராம். அவனும் புகழ்ந்தானாம். அப்போது கிருஸணர் சரி நீ தற்கொலை செய்துவிட்டாய் இப்போது போருக்குத் தயாராகு என்றாராம். (தகவல்- இணையம்) எனவே தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தாமே தம்மைப்பற்றி புகழ்வது மட்டுமல்ல, தாம் பொய்யாகத் தம்மைப் புகழ்கின்றார்கள் என்று பிறர் அறிவது கூடத் தெரியாது புகழ்வார்கள். எனவே நாம் வாழுகின்ற வாழ்க்கையில் எதனை எடுத்துப் பார்த்தாலும் திருக்குறள் அதில் எமக்குப் பாடம் கற்பிக்கும். 
   
  மற்றவர்களுக்கு நன்மை செய்வது பற்றி கூறியிருக்கின்றார். 
   
  “நல்லாற்றல் உள்ளும் தவறுஉண்டு  அவரவர் 
  பண்புஅறிந்து ஆற்றாக் கடை”
   
  நாம் யாருக்கு நன்மை செய்கின்றோம் என்று தெரிந்து கொண்டு பணியாற்று என்கின்றார்.  அதாவது
    
                    “உதவி உதவி வரைத்தன்று உதவி
                     செயப்பட்டார் சால்பின் வரைத்து ”
   
   
            மூன்றடியால் உலகளந்தார் வாமன அவதாரத்தில் விஷ்ணு, (மாபலிச்சக்கரவர்த்தி கதை) இந்த இரண்டடியால் உலகளந்தார் வள்ளுவர். அதனால்தான்  பண்பற்ற ஒருவனுக்கு இரண்டு கொடுக்க வேண்டும் என்கிறேன். அந்த இரண்டுதான் இந்தத் திருக்குறள். எங்கள் முப்பாட்டனை வளருகின்ற எங்கள் சமுதாயம் மறக்காமல் இருக்க, முதுமொழியாம் எங்கள் தமிழ் மொழி என்பதற்கு ஆதாரமாய் விளங்கும் திருக்குறளை போற்றி வாழ்வோம். அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமாம் இந்நூலை ஆழ்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து அநுபவிப்போம்.  

  வாடகை இல்லாது

  குடியிருக்கும் வீடு

  கருவறை

   

  பெருமதிமிக்க ஆயுதம்

  குற்றம் கலையும் சிறை

  தாய்ப்பார்வை

   

  வலிகளின் மாத்திரை

  சுகம் தரும் மருந்து

  தாயணைப்பு

   

   

  நாள் தோறும் ஆசான்

  நாள் அறிவுச் சாலை 

  அம்மா

   

  நிம்மதியான உறக்கம்

  உயர்ந்த பஞ்சணை

  தாய்மடி

  Pin It on Pinterest