கவிதை – Page 4 – www.worldpoetess.com
    Loading...

    உயிர் வளி நின்ற 

    ஓருயிர் விட்டுச் சென்ற

    நத்தைக் கூடொன்று

    கிடைத்ததென் 

    கையில்;

    உயிரினழகு

    இன்னமும்

    வட்ட வரிகளாய்

    உதிர்ந்த சருகின் 

    எடையில்;

    உடன் எடுத்துச் செல்ல

    ஒர் உந்துதல்;

    சென்ற உயிர்

    திரும்பிடில்

    உயிரற்ற கூடை

    உயிரோடிணைக்கும் 

    கனவில்;

    உணர்வின் மிகுதியில்

    ஐவிரல் அணைப்பில்

    காகித மெத்தையில்

    பதமாய் சுருட்டுகையில்

    நொறுங்கியது;

     

    அச் சிறு ஓடும்,

    என் இதயமும்,

    சில்லுகளில்;

    உதகம் 

    பிரிய மறுக்கும்

    உயிரற்ற அக்கூடு

    உணர்த்தியது,

    உயிர் பிரிந்திடினும்

    மெய் வேறிடம்

    செல்லாது;

     

    ஆங்கே

    பதை படிவமாகுமேயன்றி

    பற்றும் வேற்றுக் கரம் 

    ஒட்டாது!                                             

                                                         ~நளினி.

    ஆழமிகு சொல்லகற்றி அன்றாட மொழிநோக்கி

    புழங்கு வார்த்தைக்கோர் பொருளகராதி ஆக்கி

    உழவனுற்ற துயரொன்றை கருவாக்கி களமாக்கி

    எழச்செய்த கரிசலாளன் எழுத்துநிற்கும் புகழோங்கி

     

    தலைப்பு : காதலின் சிகப்பு !!!

     

    என் கரம் தீண்டி

    சிவக்கும் அவள் கன்னம்! 

    என் மேல் உதடு

    அவள் கீழ் உதட்டை நனைக்கையில்

    வெளிப்படும் நிறமோ சிவப்பு!  

    என்னை பார்த்தும் 

    பாராதது போல் நடிக்கும்

    அவள் மைதீட்டிய கண்கள்!

    அதை அப்பட்டமாய் காட்டிக் கொடுக்கும்,

    அவள் கண்ணின் நரம்புகள் சிகப்பு!

     

    மென்மையான உடல் மறைக்க

    உடுத்திடும் சேலையோ சிகப்பு!

    அவள் இதழ் சேர்ந்திட வேண்டுமென

    துடிக்கும் அத்தனை உதட்டுச்சாயமோ

    சிகப்பு !

    அவள் மேனி ருசித்திட

    அவ்வப்போது திருட்டுத்தனமாய் 

    ஊர்ந்து வரும் சிட்டெறும்பும் சிகப்பு! 

     

    நான் முத்தமிட இடையூராய் இருக்கும்,

    அந்த ஸ்டிக்கர் பொட்டும் சிகப்பு!

    கோபமாய் உருமாறுவதில் 

    சுட்டெரிக்கும் தீயின் சிகப்பு!

    பொய் கோபத்தில்

    படபடவென வெடித்துவிட்டு,

    ஒரிருசொல் உதிர்த்துவிட்டு,

    சாந்தமாகும் அவள் மிளகாயின் சிகப்பு! 

    ஊடல் தாண்டி

    சமாதானமென,

    அவள் விரும்பிய ரோஜா அளித்து,

    அது ஒய்யாரமாய் 

    கூந்தலில் குடியேறிக் கொன்டு ஆடும் பூவோ சிகப்பு! 

    அவள் ஆசை நிறைவேற்ற,

    நான் வைத்து விடும் மருதாணியும் சிகப்பு! 

    பாத்திரம் விளக்கும் போது,

    இன்னிசை இசைக்கும் வளையலும் சிகப்பு!!!

    எனக்கு சொந்தமான ஒன்றினை!

    அவளுக்கு அளித்த இதயத்தின் நிறமும் சிகப்பு!

    என்னுள் நிறைந்த

    அவளின்,

    நினைவுகளில் ஓடும்

    என் குறுதியின்

    நிறமும் சிகப்பு!

    நானும் அவளும்

    வாழ்ந்த வாழ்விற்கு,

    பரிசாய்,

    பிரசவம் முடிந்த பின்,

    அப்பாவெனும் ஸ்தானத்தில், 

    நான் உணர்ந்த

    பிறந்த குழந்தையின் முதல் ஸ்பரிசமோ சிகப்பு! 

    காதலும்! 

    சிகப்பும்!

    இயற்கையை அழித்திடாமல் இதயத்தைத் தொலைத்திடாமல்
    மனிதத்தை மறந்திடாமல்
    மனிதநேயம் புதைத்திடாமல்
    மனிதா விழித்திடு
    மனிதத்தைக் காத்திடு..

    அறத்தைப் போற்றிடு
    அன்பைத் தூவிடு
    அண்டை அயலாருக்கு
    ஆறுதலாய் இருந்திடு
    அவர் படும் துன்பத்தில்
    துணையாகவாவது இரு..

    தினப்படி வாழ்வையே
    நகர்த்தத் திண்டாடுவோர்க்கு
    திடத்தைக் கொடுத்திடு
    திண்ணமாய் உதவிடு
    விதைக்கும் விதைகள் விருட்சமாய் வளரட்டும்..

    விண்முட்டும் மனிதநேயம் வீரியமாய் செழிக்கட்டும்
    சாதி மத பேதமின்றி
    சகலரையும் போற்றிடுவோம்
    சண்டைக்கு இடமின்றி
    சத்தியத்தைக் காத்திடுவோம்

    ~அன்புடன் ஆனந்தி

    பல நாள் வலிகளின்
    பரிசு இது!!
    பலியான உயிர்கள் தந்த
    பாடம் இது!!

    முழுமையில்லை என்றாலும்
    முதன்மை இது!!
    முற்றுப்புள்ளி வைக்க
    முதல் படி இது!!

    தொற்றினை ஒழிக்க
    தோதாக வந்ததிது!!
    தொடர்ந்திடாமல் தடுக்க
    தோழனென ஆனதிது!!

    ஊசி வடிவில் வந்திட்ட
    உயிர்காப்பு இது!!
    உலகினை உயர்த்திடவே
    உறுதி ஏற்றதிது!!

    நிரந்தரம் வரும் வரை
    நிம்மதி இது!!
    நிராகரிக்காதிருந்தால்
    நிவர்த்தி இது!!
    அன்புடன்
    மஞ்சு

    முக மலர்ச்சி திரையிடும்

    மனதின் வாட்டத்தை

    குறிப்பறிவது;

     வற்றிய பொழுதுகளில்

    இரு துளி கண்ணீர்

    கடன் தருவது;

     தேற்ற அணைத்து

    ஆசுவாசிக்க ஓரடியும்

    கொடுப்பது;

     பிணக்கம் சமாதானிக்க

    முதல் சொல்

    உதிர்ப்பது;

     தனிமை விரும்புகையில்

    உடனருகே தனித்துக்

    காத்திருப்பது;

     எதுவுமில்லாத போது

    யாதுமாகி நின்று

    கரை சேர்ப்பது;

     போவென்றால் வாவென்றும்

    வாவென்றால் வந்தேனென்றும்

    புரிதல் கொள்வது;

    விழி மூடும் முன்

    காணும்

    இறுதி பிம்பமாயிருப்பது,

     ஆகச் சிறந்த வரம்!

                                                         ~நளினி.

    எழுத்தாலே ஏற்றத்தை
    எடுத்துரைத்த எழுச்சிக் கவி-தன்
    பழுத்த பகுத்தறிவால் …
    பாரதத்தாய் பாதம் தொட்டான்!!

    விடுதலை வித்திட்ட..
    விந்தைக் கவிஞனவன்
    சுடு நீராய் சுட்டெழுந்தான்..
    சுதந்திரக் கவிகளாளே!!

    பாஞ்சாலி சபதத்தால்..
    பாரதம் புகட்டிட்டான்!!
    மாஞ்சோலைக் குயிலியவள்..
    மனங்கவர் காதல் சொன்னான்!!

    கண்ணனைப் பாடியவன்…
    களிப்புறச் செய்திட்டான்!!
    பெண்ணியமும் போற்றி பல..
    பெருமைகள் சேர்த்திட்டான்!!

    சாத்திரம் மட்டுமின்றி..
    சகலமும் அறிந்தவனாம்!!- புதிய
    ஆத்திச் சூடியும் தந்து..
    அறிவுரைகள் அளித்திட்டான்!!

    முண்டாசுக் கவிஞனை நாம்
    முழுதாய்ப் படித்திட்டால்..
    கொண்டாடும் அறிவுடனே..
    கோடி நன்மை கொண்டிடலாம்!!
    அன்புடன்
    மஞ்சு

    பெரியார்- அண்ணா

    சிந்தையிற் தெளிந்த செயலாலே சாதிசூழ்

    விந்தையினில் வேற்றுமை தானொழித்து -செந்தமிழால்

    மந்தை மொழியகற்றி உறவோடுல காளுஞ்சூரிய

    சந்திர அறிவுச் சுடர்கள்.

    Pin It on Pinterest