Dhanalakshmi – www.worldpoetess.com
  Loading...

                    இதழியல் 

  எழுத்தின் கருவில் அமைந்த பெயருடன்

  இதழ்கள் பலவும் வகைவகையாய் வெளிவரும்;

  தினசரி தொடங்கி ஆண்டு மலர்களாக

  மனமகிழ்வுடன் இதழ்கள் உலா வரும் !

  மக்களும், ஆளும் அரசும் லாவகமாய் 

  தகவல்கள் பகிரும் தளமாய் இதழ்கள்;

  விறுவிறுப்பான தலையங்கம் தோரணம் கட்ட

  நறுக்கென்று நுழையுமே ஒருபக்க சிறுகதையும்!

  சிந்தனைத் தூண்டும் கார்டூன் ஓவியங்களும்

  காந்தப் பார்வையுடன் அரசியல் தகவல்களும்

  வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும்

  துணுக்கு மூட்டைகளும் கருத்துணர்த்தி மிளிரும்!

  எல்லாத் துறைகளின் அன்றாட நிகழ்வுகள்

  பாமரமக்களையும் சென்றடையுமே பதிவுகளாய்

  தகவல்கள் பகிரும் காகிதப் பெட்டகம்

  பகலவனாய் இதழியலும் அவனியில் ஒளிரும்!

  பல்வேறு கூறுகளுடன் தமிழ் இதழியலும்

  வரலாற்றுச் சிறப்புடன் குவலயத்தில் வலம்வர

  தலைக்குனிந்த எழுதுகோலின் படைப்பால்

  தொலைநோக்குப் பார்வையுடன் கலையானதே இதழும் !

  நனிசிறந்த எழுத்துநடையை மேலாடையாய் உடுத்து

  தகவல்களை இடையில் ஒய்யாரமாய் சொருகியபடி

  முகத்திலிட்ட ஒப்பனையுடன் பக்கங்களை வரிசையாய் 

  கையகப்படுத்துவாளே இதழென்னும் பொல்லாச் சிறுக்கி !

  முனைவர் தனலட்சுமி பரமசிவம்

  திருப்பதிசாரம்.

  கன்னியாகுமரி மாவட்டம்.

  மழலை மாறா ஏழாம் அகவையில்

  தமிழ்ப்பாடும் பாரதி கரம்பற்றி

  பதிந்த முத்தத்தில் நாணம் பீறிட

  ஒளிந்து கொண்ட பேதைமகள்

  கஞ்சிக் குடிக்க வழியில்லை வீட்டில்

  மிஞ்சியதோ கரைத்த ஷெல்லியும் பைரனும்

  தஞ்சம் கொண்ட வறுமையை

  நெஞ்சில் துணிவோடு சந்தித்தாள்

  பாரதிக் கவிதைகளின் தையல்நாயகி

  பார்வியக்கும் புதுமைப்பெண்ணாய் ஞானச்செருக்குடன் 

  தாயின் பரிவுடன் அன்பைப் பகிர்ந்திட

  தாரத்தின் கனிவினை இல்லறத்தில் ஊட்டினாள்

  கவிதை வானில் வட்டமிட்டப் பறவையின்

  அபிமான ரசிகையான மாண்புடையாள்

  பாரதியின் கவிதைப் புதையல்களைத் தளராது

  பாருக்குத் தேடி தந்த நன்னடையாள்

  இன்னல்கள் கண்டு பதறாத மனதிடம்

  பன்முகத்திலும் சிதறாத எண்ணங்கள்

  தடுமாற்றம் காணா தீர்மானங்களுக்கு 

  மௌனமே உத்தியாக கையாண்டாள் 

  பிறர் வியந்த வாழ்க்கைப் பயணத்தில்

  பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்த

  நிறம் மாறா கடையத்து மலரே நாம்

  மறந்த பாரதியின் செல்லம்மாள்!

  இந்திரன் மயங்கிய மேனகை அழகுடன்

  சுந்தரவனத்து மல்லிகையும் கார்க்குழலிலேற

  தந்திரமில்லாது சிறையிலிட்டாள் என்னை

  மந்திரமாய் அன்பை மொழியில் பொழிந்தபடி

  இயந்திர வாழ்க்கையிலும் மின்வெட்டில்லா அன்புடன்

  இயங்கிய இல்லற வாழ்க்கையில் வேகத்தடையாய்

  பதுங்கியிருந்த முதுமையும் தலைக்காட்ட

  பதற்றம் கண்டது வாழ்க்கைப் பயணம்

  பிறைநெற்றியுடன் சிவந்த கன்னங்களையும்

  சூறையாடியதோ இளமையுடன் முதுமை

  முத்துப்பற்களின்  நட்பை இழந்த மென்னிதழும்

  முத்தாய்ப்பாய் உதிர்த்ததே காதலுடன் புன்முறுவலை

  நூற்றாண்டு கடந்த தாம்பத்திய உறவும்

  நூற்பாலையில் இழைந்தோடும் நூல் போலும்

  ஏற்ற இறக்கத்துடன் பின்னலிட, இன்றோ

  மறத்ததே அடங்கிய அவளது நாடியினால்

  மூடிய விழிகள் அன்புடன் அழைத்திட

  வடிந்தக் கண்ணீரை என்னவளுக்குக் காணிக்கையாக்கிப்

  படபடப்புடன் குருதி சிந்திய என் குருதயமும்

  ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதே நன்றியுடன் என்னவளுக்காக!

  Pin It on Pinterest